'பொன்னியின்_செல்வன்' படிக்க வேண்டாம்! கேட்கலாம்.. கதையாய் சொல்கிறார் பேராவூரணி கவிதா!
தொண்ணூறுகளில் தமிழ் வாசகர்களை சுமார் 5 ஆண்டுகள் கட்டிப்போட்ட காவியம் பொன்னியின் செல்வன்.
ஆசிரியர் கல்கி அவர்கள் திரட்டிய திரவியம்.
இந்நாவலின் பாத்திரப் படைப்புகளை படித்தவர்கள் கூறும் போது மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்.
பொன்னியின் செல்வன் வாசகர்களுக்கான விருந்து.
முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் தொடங்கி நடிப்புலக நாயகன் கமலஹாசன் வரை வெள்ளித்திரையில் வெளியிட ஆசைப்பட்ட காவியம்.
கலை சார்ந்த படைப்புலகை ஆட்டிப்படைப்பவர்கள் அத்தனை பேரும் அவரவர் படைப்பின் வழி இந்த கதையை பரப்பிட நினைப்பார்கள்.
தமிழர்களின் விதைப்பு திருநாளான ஆடிப்பெருக்கு பெருமிதத்தோடு தொடங்கும் இந்நாவல் தமிழர்களின் வாழ்வியலை அழகியல் ததும்பத் ததும்ப கூறுகிறது.
இவ்விலக்கிய நூல் இளம் தலைமுறைகளிடம் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் கதையாக சொல்கிறார் கவிதா.
இவர் ஒரு பொறியியல் பட்டதாரி.
தஞ்சாவூர் மாவட்டம், #பேராவூரணியைச் சேர்ந்தவர்.
ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச நாயகர்களை மக்கள் படித்துத் தெரிந்து கொண்டதை விட, பார்த்தும் கேட்டும் தெரிந்து கொண்டது தான் அதிகம்.
ஆண்டுதோறும் கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் நாடகங்கள், கதாகாலட்சேபங்கள், சமயச் சொற்பொழிவுகள் இதிலிருந்தே இதிகாச நாயகர்களை மக்கள் தெரிந்து கொண்டார்கள்.
அந்தக்கால பாட்டிகளும் கதை சொல்லியே தலைமுறைகளை தலைநிமிர வைத்துள்ளார்கள்.
அறம் போற்றும் கதைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமானால் கதை சொல்வதால் மட்டுமே சாத்தியம் என்பதை புரிந்துகொண்ட கவிதா, பொன்னியின் செல்வன் என்ற சோழ மன்னர்களின் வரலாற்றுப் புனைவை கதையாக கூறி இளம் தலைமுறையை கவர்கிறார்.
எதையும் கூகுள் உலகத்திற்கு உள்ளேயே தேடும் இளம் தலைமுறைக்கு கூகுள் பாட்காஸ்ட் வழியாகவே சென்று கதை கூறுகிறார்.
பெரிய பெரிய புத்தகங்களை சந்தையில் வாங்கி வந்து கொடுத்தாலும், வீட்டு அலமாரியில் அழகு சேர்க்கிறதே தவிர இளம் தலைமுறைகளிடம் சென்று சேரவில்லை என்று அலுத்துக் கொள்ளும் புத்தக வாசிப்பாளர்கள் தங்கள் பிள்ளைகளை கவிதா சொல்லும் கதையை கேட்கச் சொல்லலாம்!
கதை கேட்க கீழே கிளிக் செய்யவும்
கதை சொல்லும் கவிதா அவர்கள் நம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதில் நமக்கெல்லாம் பெருமைதானே!
கூடுதல் தகவல்:
திருமதி கவிதா அவர்கள் பேராவூரணியின் சிறந்த கல்வியாளர்
ஐயா கே.வி.கிருஷ்ணன் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள்
கருத்துரையிடுக