"ஐயா மரம் தங்கச்சாமி" பள்ளி பாடத்தில் சேர்த்திட வலியுறுத்துவோம்
"வாழ்க மரங்களுடன்"
இது ஐயாவின் மந்திரச்சொல்.
ஆண்டுதோறும் மாலையிட்டு நோன்பிருந்து மரம் வளர்த்த பெருமகன்.
"ஜாதியை வளர்க்காமல்,
ஜாதி மரங்களை நட்டு வளருங்கள்"
என்று கூறி பல்லாயிரக்கணக்கான மரங்களை சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் வளர்த்து பசுமை காட்டை உருவாக்கி அதற்கு கற்பகச் சோலை என்று பெயரிட்டவர்.
உலகத் தலைவர்களின் பிறந்தநாள் நினைவு நாள்களில் மரக்கன்றுகள் நட்டு அடர் காட்டை உருவாக்கிய அற்புதமான மனிதர்.
தன்னை அழைக்கும் மணவிழா நிகழ்வுகளுக்கு மரக்கன்றுகளோடு சென்று மணமக்களை வாழ்த்தும் மரபை உருவாக்கியவர்.
மரக்கன்றுகளை திருமண தாம்பூலம் ஆக மக்களுக்கு கொடுக்க வைத்தவர்.
கார்ப்பரேட் சாமியார்களையும் சமூக மாற்றத்திற்காக பணியாற்ற வைத்த பண்பாளர்.
இயற்கை வேளாண் குறித்தும் மரம் வளர்ப்பு குறித்தும் மாநாடுகளை நடத்தியவர்.
சூழலியல் பாதுகாப்பு குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.
நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் பள்ளிக்கூடமாக தான் வளர்த்த கற்பகச் சோலையை மாற்றியவர்.
உலகத்தின் ஒப்பற்ற இதழ்களில் உயர்வாக போற்றப்பட்ட செந்தமிழ்ச் செல்வர்.
சேந்தன்குடியின் செல்வமகன் ஐயா மரம் தங்கச்சாமி. அய்யாவின் நினைவு நாள் இன்று.
நம் வீட்டில் நடக்கும் விழாக்களில் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி மகிழ்வோம்.
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்பது பழமொழி. ஒவ்வொருவரும் காடு வளர்க்க தொடங்குவோம் இதுதான் புதுமொழி.
#மரம்_தங்கசாமி அவர்களின் மாண்பை போற்றுவோம்.
மாணவர்கள் கையால் மரக்கன்றுகள் நட பழக்குவோம்.
சொல்லப் பயன்படும் சான்றோராய் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த ஐயாவின் வரலாற்றை வகுப்பறை மாணவர்களிடம் எடுத்துச் செல்வோம். பள்ளிப் பாடத்தில் சேர்த்திட தமிழ்நாடு அரசை வலியுறுத்துவோம்!
"வாழ்வோம் மரங்களுடன்"
கருத்துகள்
கருத்துரையிடுக