குறைந்தபட்ச தேவை ஒரு லட்சம் ரூபாய்
"பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று அறம் பாடுகிறது தமிழ்.
பேராவூரணி - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குப் பின்புறம் பாந்தகுளம் பகுதியில் பாட்டி - தாத்தா ஆதரவில் அம்மா, தங்கையோடு வசித்து வருகிறார் சேக் அப்துல்லா.
படிப்பில் படு சுட்டியான சேக் அப்துல்லா தந்தையை தனது சிறு வயதிலேயே பறிகொடுத்தவர்.
தாத்தா பாட்டி ஆதரவில் அன்னையின் அரவணைப்பில் ஆரம்பப் பள்ளியை பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்து, மருத்துவம் படிக்க ஆயத்தமாகி வருகிறார்.
தொடக்கப்பள்ளி முதலே வகுப்பில் முதல் இடத்தைத் தனக்கு உரியதாக மாற்றிக் கொண்டவர் சேக் அப்துல்லா .
"நீ பெரிய டாக்டராகி ஏழை-பாழைகளுக்கு உதவனும்" என்ற பாட்டியின் விருப்பமே இவரின் இலக்காகிப் போனது. யார் கேட்டாலும் நான் "டாக்டராவேன்" என்று பெருமிதமாகச் சொல்லுவான் அப்துல்லா. அப்போதெல்லாம் அவனுக்குத் தெரியாது பள்ளிப் படிப்புக்குப் பின் மருத்துவராக வேண்டுமென்றால் நீட் தேர்வு எழுதவேண்டும் என்று.
"அப்துல்லா நல்லா படிக்கிறான் அவனை இங்கிலீசு கான்வென்டுல சேத்துவிட்டா என்ன?" என்று கேட்கும் உறவுகளிடம் "படிக்கிற புள்ள எங்க படிச்சாலும் நல்லா படிக்கும். நா பாக்குற கலக்டர் உத்துயோகத்துல இவன அங்கெல்லாம் படிக்க வைக்க முடியுமா?" என்று கூறுவார் அப்துல்லாவின் அம்மா பர்ஜான் பேகம்.
அம்மாவின் வாக்கை மெய்ப்பித்தது பத்தாம் வகுப்பில். அப்துல்லா பெற்ற மதிப்பெண் 482. பள்ளியும், நண்பர் கூட்டமும், உறவுகளும் கொண்டாடித் தீர்த்தன.
பத்தாம் வகுப்பில் அப்துல்லா பெற்ற மதிப்பெண் தனியார் பள்ளிகளை அவனது வீட்டு வாசலுக்கு வரவைத்தது. கட்டணம் கட்ட வேண்டாம், எங்கள் பள்ளியில் சேர்த்துக்கொள்கிறோம் என்றார்கள்.
மசியவில்லை. தான் படித்த அரசுப் பள்ளியிலேயே கணித-அறிவியல் பிரிவில் படிப்பைத் தொடர்வதென முடிவெடுத்தான் அப்துல்லா. 12ஆம் வகுப்பில் பள்ளியில் முதலிடம், பெற்ற மதிப்பெண் 538.
"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்",
"பெரிதினும் பெரிது கேள்",
"மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு"
என்ற தமிழின் தன்னம்பிக்கையை உள்ளத்தில் கொண்டு தனது இலக்கை நோக்கி தயாராகி வருகிறான் அப்துல்லா.
போட்டிகள் நிறைந்த நீட் தேர்வை எதிர்கொள்ள உரிய பயிற்சியைப் பெற்றிட ஆயத்தாமாகி வருகிறான். திருச்சி போன்ற நகரங்களில் தமிழ்வழி படித்த மாணவர்களுக்கு நடத்தப்பெறும் பயிற்சியில் சேர்ந்து படித்திட குறைந்தபட்சம் லட்சம் ரூபாய் தேவைப் படுகிறது.
வெள்ளந்தியான தாத்தா, பாட்டி, அம்மா, தங்கை என உறவுகளோடு மழைக் காலங்களில் ஒழுகும் குடிசைக்குள் இருந்துகொண்டு, இன்னும்மொரு அப்துல்கலாம் போன்று அகிலம் போற்ற வாழ்ந்திடும் வற்றாத கனவுகளைச் சுமந்துகொண்டு, சமூகத்தில் மேலெழும்பிவர தன்னம்பிக்கையோடு போராடி வருகிறான் அப்துல்லா.
உயர்ந்த உள்ளங்களே!
சேக்அப்துல்லா மருத்துவம் படிக்க உதவுங்கள்!
உங்களின் வளம்
வறியவர் வாழ்வில் ஒளியேற்றட்டும்.
சேக் அப்துல்லா போன்ற
எளியவர் வீட்டுப் பிள்ளை
படித்து வரும்போதுதான்
எளியவர்க்கும் மருத்துவம்
எட்டும் நிலை கிட்டும்.
சேக்அப்துல்லாவுக்கு
உதவ விருப்பம் உள்ளவர்கள்
8012110535
என்ற
கைபேசி எண்ணிற்குத் தொடர்புகொண்டு
கரம்கொடுக்க வேண்டுகிறது மெய்ச்சுடர்.
கருத்துகள்
கருத்துரையிடுக