மாவட்ட ஆட்சியரால் பாரட்டப்பெற்றார் மரங்களின் காதலர் சி.மணிவண்ணன்

 






பேராவூரணி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி பணி நிறைவு பெற்றவர் ஐயா சி.மணிவண்ணன்.
பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட பல கிராமங்களில் பணியாற்றியிருக்கிறார்.
எளிய மக்களின் பக்கம் நின்று இவரின் செயல்பாடுகள் இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களின் பாதைகளுக்கு வழியமைத்துத் தந்தவர். சில கிராமங்களில் நூற்றாண்டு கால பாதைச் சிக்கல்களை பக்கத்தில் நின்று தீர்வு கண்டிருக்கிறார்.
திருவத்தேவன் கிராமத்தில் இவர் பணியாற்றிய காலத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையிலிருந்து சோலைக்காடு செல்ல சுமார் 7 கி.மீ. சுற்றிச் செல்லும் நிலை கண்டு கலங்கினார். திருவத்தேவன் புதுத்தெரு முதல் பூமாரியம்மன் கோயில் வரை உள்ள பட்டாதாரர்களிடம் பேசி சோலைக்காடு கிராமத்திலிருந்து திருவத்தேவன் செல்வதற்கு வசதி செய்து கொடுத்தவர்.
புறம்போக்கு நில ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்துகூட தனி நபர்களை வெளியேற்ற பெரும் போராட்டத்தையும் சட்டம் ஒழுங்குச் சிக்கலையும் வருவாய்த்துறை எதிர்கொண்டு வருவதை நாம் காண்கிறோம். இந்தக் காலத்தில் தனி நபர்களிடம் பேசி பட்டா நிலத்தை பாதைக்காக பெற்று தந்த இவரின் செயல் இப்பகுதி மக்களால் இன்றும் போற்றப்படுகிறது.
சூழலியல் ஆர்வலரான ஐயா மணிவண்ணன், தான் பணியாற்றிய கிராமங்களின் சுற்றுப்புறத்தை மிகவும் பசுமையாக வைத்துக்கொள்ள தொடர்ந்து செயலாற்றியுள்ளார். தனது கிராம நிர்வாக அலுவலகத்தை சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்பதை பழக்கமாக மாற்றிக் கொண்டவர். இவர் பணியாற்றிய கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்களிடம் சூழலியல் குறித்த செய்திகளை கூறுவதோடு மட்டுமல்லாமல் பள்ளி வாளாகங்களை பசுமையாக மாற்றிட மாணவர்களோடு சேர்ந்து களப்பணியாற்றியவர்.
பார்க்கும் இடங்களிலெல்லாம்
நந்தலாலா
நின்னை பச்சை நிறம் தோன்றுதையே
நந்தலாலா
என்று பசுமை சூழ்ந்த இயற்கையை இறைவனாகக் கண்ட பாரதியைப் போன்ற உள்ளம் கொண்டவர். தனது பணி நிறைவுக்குப் பின் கிடைத்த ஓய்வூதியப் பணப் பலன் ரூபாய் மூன்று லட்சத்தைக் கொண்டு பேராவூரணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் வரிசை வரிசையாய் மரக் கன்றுகளை நட்டுப் பராமரித்து வருபவர்.
கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொத்துக் கொத்தாய் சாய்ந்துச் சரிந்த மரங்களின் அருகில் நின்று கண்ணீர் வடித்த ஐயா மணிவண்ணனைத் தேற்றிட முடியாமல் தவித்தனர் அலுவலகப் பணியாளர்கள். மகாகவியைப் போன்றே முறுக்கு மீசையுடன் கம்பீரமாய் காட்சிதரும் ஐயா மணிவண்ணன் மரங்கள் வேரோடுச் சாய்ந்ததைக் கண்டு உள்ளம் உடைந்து கதறியதை இப்பகுதியில் யாராலும் மறக்கமுடியாது.
மீண்டும் மரக்கன்றுகள் நட்டு ஒவ்வொரு நாளும் அதற்கு நீர்விட்டு அந்த மரங்களோடு பேசிவிட்டுச் செல்லும் இவரை இப்பகுதியில் அதிசயமாகப் பார்கிறார்கள்.
சிறிய கன்றாக வைத்து வளர்ந்து நிழல்பரப்பி தன்னைவிட உயரமாக வளர்ந்து நிற்கும் மரங்களை ஒரு தந்தையைப் போல பெருமிதத்தோடு பார்க்கும் இவரின் பார்வை கண்ணோட்டம் நிறைந்தது. இன்று வட்டாட்சியர் அலுவலகம் பசுமையைப் போர்த்திக் கொள்ள காரணமாக திகழ்பவர்.
இவரின் இணையர் தேன்மொழி, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். தனது மனைவி ஆசிரியராக பணியாற்றிய பள்ளிகளையெல்லாம் தத்தெடுத்துக் கொண்டு பள்ளி வளாகங்களை பசுஞ்சோலைகளாய் மாற்றியவர் ஐயா மணிவண்ணன்.
பலரும் மரம் நடும் விழாவில் நட்ட மரக் கன்றை மறந்து போவார்கள். ஆனால் ஐயா மணிவண்ணன் தான் நட்ட ஒவ்வொரு மரக்கன்றையும் கண்டு நலம் விசாரித்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டவர்.
இவரின் சூழலியல் செயல்பாடுகளைப் பாராட்டி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திரு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள், 75 ஆவது இந்திய விடுதலை நாள் விழாவில் ஐயா மணிவண்ணன் அவர்களுக்கு நற்சான்று வழங்கி பாராட்டியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் ஐயா சி. மணிவண்ணன் அவர்களின் செயல்பாடுகள் குறித்து மெய்ச்சுடர் கட்டுரை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

சூழலியல் செயல்பாட்டாளர் ஐயா மணிவண்ணன் அவர்களுக்கும் அவரின் செயல்பாடுகளைக் கண்டு பாராட்டிய மாவட்ட ஆட்சியருக்கும் மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா