தாய் மொழிக் கல்வியின் அவசியத்தை அயல்நாட்டினரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் - ஆசிரியர் ந.காசிலிங்கம் நினைவேந்தல் நிகழ்வில் மருத்துவர் நீலகண்டன் பேச்சு!
தாய் மொழிக் கல்வியின் அவசியத்தை அயல்நாட்டினரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் - ஆசிரியர் ந.காசிலிங்கம் நினைவேந்தல் நிகழ்வில் மருத்துவர் நீலகண்டன் பேச்சு!
தமிழ் மொழிக்காகவும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலனுக்காகவும்,
அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் செயல்பலசெய்த சமூக செயற்பாட்டாளர் ஆசிரியர் ஐயா
காசிலிங்கம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல், படத்திறப்பு நிகழ்வு கொத்தமங்கலம்,
வாடிமாநகர், பொது அரங்கில் நடைபெற்றது. தமிழ்வழிக் கல்வி இயக்கம் மற்றும் அறமுரசு
இயக்கம் இணைந்து நடத்திய இந்த நிகழ்வுக்கு தோழர் குணசேகரன் தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஐயா காசிலிங்கம் அவர்களின் படத்தைத் திறந்து
வைத்து பேசிய மருத்துவர் துரை. நீலகண்டன், "நாம் எல்லாவற்றுக்கும் ஐரோப்பிய நாடுகளையும்,
அமேரிக்காவையும் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறோம். குறிப்பாக நமது ஆட்சியாளர்கள்
வெளிநாடுகளை சான்றாகக் காட்டி நம்நாட்டின் சுற்றுச்சூழல் குறித்து விரிவாகப் பேசி வருகிறார்கள்.
அந்நாட்டின் தொழில் நுட்பங்களையெல்லாம் நம் நாட்டில் நடை முறைப்படுத்திட முயலுகிறார்கள்.
ஆனால் வெளிநாட்டினர் தங்களது தாய் மொழிக்கும், தாய் மொழிக் கல்விக்கும் கொடுக்கும்
முக்கியத்துவம் குறித்து இங்கு பெரிதாகப் பேசுவதில்லை. அயல்நாட்டினரிடம் நமது ஆட்சியாளர்களும்,
மக்களும் கற்றுக் கொள்ள வேண்டியது தாய்மொழிக் கல்வி. ஒரு குழந்தை தாய்மொழியில் கற்கும்போதுதான்
சிந்தனைத் திறனும் கற்பனை வளமும் பெற்றுத்திகழும். அதே போல் நாம் நமது தொழிலுக்குக்
கொடுக்கும் முக்கியத்துவத்தை நம்மைச் சுற்றி நடக்கும் சமூகச் செயல்பாடுகளில் காட்டுவதில்லை.
ஒவ்வொருவரின் சமுதாயச் செயல்பாடுகள்தான் அவர்களின் உண்மையான வாழ்வு என்பதை உணர வேண்டும்.
பரம ஏழைகளுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் நோய் வருவதும், உடல் வருத்துவதும், இறப்பு
நேர்வதும் சமமாகவே நிகழ்கிறது. நான் மருத்துவராக இருப்பதால் நாள்தோறும் பல மனிதர்களைச்
சந்திக்கிறேன். வயதாகி நோய்வாய்ப்பட்டு கடைசி நேரத்தில் இருக்கும் மனிதர்கள் பலர்
தங்கள் வாழ்நாளில் தாங்கள் செய்த நல்ல செயல்களை நினைத்து மகிழ்வதையும், அப்படி நற்செயல்கள்
செய்யாதவர்கள் ஒவ்வொரு நிமிடமும் வருத்தமுற்று இருப்பதையும் பார்த்திருக்கிறேன். நாம்
வாழும் காலத்தில் நற்செயல்களில் ஈடுபடுவதை விடாமல் தொடரவேண்டும்" என்றார்.
நிகழ்வில் மருத்துவர் துரை.நீலகண்டன் எழுதிய 'தொடர் பயணத்தில் சிறு இளைப்பாறல்'
என்ற நூலின் அறிமுகமும் நடைபெற்றது. நுலினை அறிமுகம் செய்து பேசிய மெய்ச்சுடர் நா.வெங்கடேசன்,"இந்த
நூல் அறம் பேசுகிறது. உலக இலக்கியங்களின் ஒற்றை நோக்கமாக திருக்குறள் கூறும் பகுத்துண்டு
பல்லுயிர் ஓம்பும் பண்பை சமூகத்தில் விதைக்கிறது. நம் காலத்தில் நாம் சந்தித்த பேரிடர்களான
கஜா புயல் மற்றும் கொரோனா போன்ற சமகால நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது. உழவர்களின்
நிலையைப் பேசுகிறது. கல்வியும் மருத்துவமும் சந்தையாவதைச் சாடும் கவிதைகள் இந்த நூலில்
இடம்பெற்றுள்ளது. எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை விதைக்கும் நிகழ்காலத்தின் பாடமாக
இந்த நூல் திகழ்கிறது. அனைவரும் வங்கிப் படித்துப் பாருங்கள்" என்றார்.
தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் தலைவர் தோழர் அ.சி.சின்னப்பாத்தமிழர்
தொகுப்புரையாற்றினார். தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்
என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். முன்னதாக தோழர் ந.இரெத்தினம்
வரவேற்றார், நிறைவாக தோழர் இலெ. சீனிவாசன் நன்றிகூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக