ஆசிரியர் காஜா முகைதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

ஆசிரியர் காஜா முகைதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!




அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி குறித்த உயர்ந்த மதிப்பீட்டை சமூகத்தில் விதைக்க வேண்டியது மிகவும் அவசியம். வெறும் சொற்களால் அல்ல தங்களது செயல்பாடுகளால் பள்ளியின் மதிப்பை உயர்த்த வேண்டியது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை.

தாங்கள் பணியாற்றும் அரசுப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பது என்பது ஒரு அறம்.

பேராவூருணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் காஜா முகைதீன் தனது பிள்ளையை தான் பணி செய்யும் அரசுப் பள்ளியிலேயே முதல் வகுப்பில், தமிழ்வழியில் சேர்க்கை செய்திருக்கிறார்.

இவ்வாண்டு நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் காஜா முகைதீன் தான் பணியாற்றும் பள்ளியின் கட்டமைப்பு மற்றும் கல்விச் செயல்பாடுகள் குறித்து சமூக ஊடகங்களில் சிறப்பாக பதிவிட்டு வருபவர். தான் பணியாற்றும் பள்ளிக்கு மாணவர்களை சேர்க்க தொடர்ந்து செயலாற்றி வருபவர்.

இந்நிலையில் இன்று தனது மகள் ஜுவைரியா வை தான் பணியாற்றும் பள்ளியில் சேர்க்கை செய்து இருப்பதன் மூலம் அரசுப்பள்ளி மீதான மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான நன்நம்பிக்கையை சமூகத்தில் விதைத்திருக்கிறார்.

தான் பணியாற்றும் பள்ளியில் தமிழ் வழியில் மாணவர்களை சேர்த்திட தொடர்ந்து செயல்பட்டு வரும் இவர் தனது மகளை தமிழ்வழிக் கல்வியில் சேர்த்து இருப்பதன் மூலம் தாய்மொழிக் கல்வியின் அவசியத்தையும் சமூகத்திற்கு உணர்த்தியிருக்கிறார்.

இவர் ஒரு நல்லாசிரியர் என்பதற்கான உச்சகட்ட செயல்பாடாக இதை நாம் பார்க்கலாம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைக்கோடி ஊரான பேராவூருணி வட்டத்தில் ஒரு சிறிய பள்ளியில் பணியாற்றிவரும் இவர் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் கல்வி தொலைக்காட்சியின் வாயிலாகவும் மாணவர்களுக்கு பாடம் நடத்திவருகிறார்.

பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டு இருந்த காலத்தில் கல்வித் தொலைக்காட்சி படப்பிடிப்பிற்காக இவர் பல கிலோமீட்டர் இருசக்கர வாகனத்தில் சென்று வந்திருக்கிறார்.
சொல்லும் செயலும் ஒருமித்து ஒட்டு மொத்த அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக தொடர்ந்து உழைத்து வரும் ஐயா காஜா முகைதீன் அவர்களை நெஞ்சம் நெகிழ வாழ்த்துகிறோம்.

ஒவ்வொரு அரசுப் பள்ளி ஆசிரியரும் சிறப்பாக செயல்படும் பொழுது கல்வி வணிகம் ஆவது தடுக்கப்படும். கல்வி சமத்துவம் சாத்தியமாகும்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா