அரச பயங்கரவாதம்

அரச பயங்கரவாதம்
பந்நெடுங்காலமாகவே பாட்டாளிகளும், உழைப்பாளிகளும் நிலப்பிரபுக்களாலும், அரசாங்கத்தாலும் சுரண்டப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வந்திருக்கிறார்கள். 

உரிமைகள் மறுக்கப்பட்டடு, உழைப்பு சுரண்டப்பட்டு, கொத்தடிமைகளாக உழைப்பவர்களை கருதும் மனநிலை, அடிப்படை நிலையிலிருந்து அரசுக் கட்டில் வரை தொடர்கிறது. அதற்கு தற்கால சாட்சிதான் ஆந்திராவில் இருபதுபேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம். 

உழைக்கும் அடித்தட்டு மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக நிலமிழந்து, சுயம் இழந்து, மொழி இழந்து அந்நியப் பகுதியில் அடிமைகளாக வாழ அடிப்படை காரணமே மக்களிடம் காணப்படும் ஆதிக்க சிந்தனைதான். 

சமூகத்தால் அருகாமையில் இருக்கும் உழைப்பாளிகள், விவசாயக்கூலிகள், தொழிலாளர்கள் மதிப்பளிக்கப்படாதபோது அவர்கள் பிழைக்கப் போன இடத்திலும் இதே கொடுமைகளுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதுவும் அரசின் ஒத்துழைப்போடு நடைபெற்ற பயங்கரவாதம்தான் ஆந்திராவில் நடந்த 20 கூலித்தொழிலாளர்களின் கொலை. 

ஆந்திராவோ, தமிழ்நாடோ, இந்தியாவோ யாருக்காக அரசு இயந்திரம் செயல்படுகிறது என்பதுதான் கேள்விக்குறி. 


ஒருபக்கம் கொலை செய்துவிட்டு அது சட்டப்படி நடந்த என்கவுண்டர்தான் என்கிறது ஆந்திர அரசு. கொலையுண்டவர்கள் தண்டனைக்குரிய குற்றவாளிகள் என்கிறார்கள் ஆந்திர ஆட்சியாளர்கள். தமிழ்நாட்டில் அந்த அப்பாவித் தமிழர்களுக்காக நடைபெறும் போராட்டங்களை திசைதிருப்ப தமிழக அரசால் அந்த அப்பாவித் தமிழர்களின் குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. இரண்டு மாநிலங்களிலும் நடப்பது அரச பயங்கரவாதத்தை மூடி மறைப்பதற்கான செயல்தானே?


சில மாதங்களுக்கு முன்பு சென்னை மவுளிவாக்கம் பகுதியில் கட்டிடம் விபத்துக்குள்ளாகி 60 கட்டிடத் தொழிலாளர்கள் இறந்து போனார்களே? அவர்கள் யார்? அவர்களின் இறப்புக்கு காரணமானவர்கள் யார்? முறையற்ற முறையில் கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்தது யார்? இங்கும் இதுபோன்ற அரச பயங்கரவாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழக்கும் பாட்டாளிகளுக்கு சொர்ப்பத் தொகைகளை நிவாரணமாக அந்தந்த மாநில அரசாங்கங்கள் அளித்துவிட்டு ஒட்டுமொத்த மக்களையும் அடக்கிவிடுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அல்லது உழைக்கும் மக்களுக்குள் பிரிவினையை உண்டாக்கி பிரச்சனையைத் திசைதிருப்பிவிடுகிறது. இதுதான் ஆட்சியாளர்களின் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான பூசாரி வேலையாக ​தொடர்ந்து இருந்து வருகிறது. ஒருவேளை நடப்பது மக்களுக்கான அரசாக இருந்தால் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டிருப்பார்களே? அவர்களின் முகங்கள் வெகுமக்கள் பார்க்கும் ஊடகங்களில் கூட வெளிப்படாமல் இருக்கிறதே? ஏன்?


இலங்கையில் நடக்கும் இனப் படுகொலைகள்போல் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அரசாங்கத்தாலேயே கட்டவிழ்க்கப்படுவது கண்டனத்திற்குரியது. 

ஒருவன் எந்த இனத்தவனாக இருந்தாலும் அவன் கார்ப்பரோட் ஆதரவாளனா அல்லது கார்ப்பரேட்களின் எதிராளியா என்பதுதான் இந்தியாவின் பார்வையாக இருக்கிறது.

அரசாங்கத்தை ஆளும் ஆட்சியாளர்களுக்கு ஆதரவான கார்ப்பரேட்களுக்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டங்கள் இந்தியாவில் நசுக்கப்படுகிறது. உழைக்கும் மக்களும், போராடும் மக்களும் போலீஸ், இராணுவம் கொண்டு ஒடுக்கப்படுகிறார்கள். 

இந்த அரச பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவில் உள்ள எல்லா தேசிய இனங்களும் போராட வேண்டிய சூழலில் இவர்களை தமிழர்களாக, தெலுங்கர்களாக, கன்னடர்களாக பார்த்து ஒட்டுமொத்த பயங்கரவாதத்திற்கும், தேச விரோதத்திற்கும் துணைபோகாமல் உழைக்கும் மக்களுக்காக போராடுவோம். தேசத்தின் நிலத்தை அந்நியர்களுக்கு தாரைவார்க்கும் போக்கை எதிர்ப்போம். நமது கனிம வளங்களை பன்னாட்டுக் கம்பெனிகளோடு கூட்டாக சேர்ந்து கொள்ளையடிக்கும் கும்பலை அடையாளம் காண்போம். இதுவே இன்றைய தேவை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா