ஆத்தாளூர் கல்வி வள்ளல் மு.அ.முத்துச்சாமி
ஆத்தாளூர், பேராவூரணி பேரூராட்சியின் ஒரு பகுதி. புகழ் பெற்ற அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில், புகழ்பெற்ற மரியம்பீவி அம்மா தர்கா அமையப்பெற்ற ஊர்.
ஊரை சுற்றிலும் நீர் வழித்தடங்கள் அமையப்பெற்று அழகிய தீவு போன்று இந்த ஊர் காட்சியளிக்கிறது. இயற்கை எழில் சூழ்ந்த ஊரகப் பகுதி.
பேரூராட்சியின் அங்கமாக இருந்தாலும் நகர வாசனை அற்ற ஊரகப் பகுதியாக இன்றும் காட்சி தருகிறது.
கல்வியாளர்களும், இலக்கியவாதிகளும், வேளாண் குடி மக்களும், உழைப்பாளிகளும் அமைதியாக வாழ்ந்து வரும் கிராமம்.
இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் கட்டமைப்பை வலுப்படுத்த தேசத் தலைவர்கள் பாடுபட்டு வந்தனர்.
தமிழ்நாட்டில் கல்வியை கடையனுக்கும் சேர்த்து விட வேண்டும் என்பதில் பெருந்தலைவர் காமராசரும் அதற்குப் பின் வந்த தலைவர்களும் செயல்பட்டனர்.
ஆத்தாளூர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மிகப் பாரம்பரியமிக்க பள்ளியாகும். இந்திய விடுதலைக்குப் பிறகு நம் பகுதியில் தொடங்கப்பட்ட முதல் பள்ளி. 1948 ஆம் ஆண்டு இப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் கோவில் வளாகத்திலேயே கோவிலுக்குச் சொந்தமான கட்டிடத்தில் இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. நாளடைவில் கட்டிடம் பழுதடைய பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழல். பள்ளிக்கென்று இடமிருந்தால் உரிய கட்டிட வசதியை அரசு செய்து தருவதற்கு ஆயத்தமாக இருந்தது.
இந்த ஊரிலேயே கல்வியின் மீது காதல் கொண்ட மனிதரும் வசித்து வந்தார். மு.அ.முத்துச்சாமி, ஆம் 1970களில் தனி ஒரு மனிதனாக 'வள்ளியம்மை நூலகம்' என்ற பெயரில் நூலகத்தை நடத்தி வந்தவர்.
வயல்வெளிகளும், தோப்புத் துரவுகளும், ஆடு மாடுகளும் நிறைந்த செல்வ வளம் மிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கல்வியின் மீது நம்பிக்கை கொண்டவராக திகழ்ந்தார் மு.அ.முத்துச்சாமி.
பள்ளிக்கு இடம் வேண்டும் என்று அறிந்ததும் ஊருக்கு நடுவில் தனக்குச் சொந்தமான ஒரு 'மா' நிலத்தை பள்ளிக்கு வழங்கினார். அந்த இடத்திலேயே கட்டிடம் கட்டப்பட்டு தமிழ்நாடு அமைச்சர் எம் ஆர் ஜி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்தப் பள்ளியில் பயின்றவர்கள் இன்று எழுத்தாளர்களாக, கல்வியாளர்களாக, அரசின் பொறுப்பு மிக்க பதவிகளில் இருக்கிறார்கள்.
ஐயா குசேலராகவன் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றனர். தற்பொழுது 25 லிருந்து 30 மாணவர்களுக்குள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வருகிறார்கள்.
மாணவர் எண்ணிக்கையோடு பள்ளி கட்டமைப்பையும் மீட்க வேண்டிய சூழலில் உள்ளோம்.
விடுதலை வேட்கைக்குப் பிறகு கல்வி வேட்கையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கூட இல்லாமல் வளைந்தும் நெளிந்தும் உள்ள முள்வேலிக்குள் சிறை பட்டு கிடக்கிறது இந்தப் பள்ளி.
ஐயா முத்துச்சாமி அவர்களின் கனவை காலம் கடந்தும் காப்பது நமது கடமை.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு வேண்டுகோள்:
இப்பள்ளியின் பசுமையை பாதுகாக்க, சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுங்கள். மிக நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் உங்களிடம் கேட்கும் இந்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுங்கள்.
நம்பிக்கையுடன்...
ஆசிரியர்,
மெய்ச்சுடர்


கருத்துகள்
கருத்துரையிடுக