ஆத்தாளூர் கல்வி வள்ளல் மு.அ.முத்துச்சாமி
ஆத்தாளூர், பேராவூரணி பேரூராட்சியின் ஒரு பகுதி. புகழ் பெற்ற அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில், புகழ்பெற்ற மரியம்பீவி அம்மா தர்கா அமையப்பெற்ற ஊர். ஊரை சுற்றிலும் நீர் வழித்தடங்கள் அமையப்பெற்று அழகிய தீவு போன்று இந்த ஊர் காட்சியளிக்கிறது. இயற்கை எழில் சூழ்ந்த ஊரகப் பகுதி. பேரூராட்சியின் அங்கமாக இருந்தாலும் நகர வாசனை அற்ற ஊரகப் பகுதியாக இன்றும் காட்சி தருகிறது. கல்வியாளர்களும், இலக்கியவாதிகளும், வேளாண் குடி மக்களும், உழைப்பாளிகளும் அமைதியாக வாழ்ந்து வரும் கிராமம். இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் கட்டமைப்பை வலுப்படுத்த தேசத் தலைவர்கள் பாடுபட்டு வந்தனர். தமிழ்நாட்டில் கல்வியை கடையனுக்கும் சேர்த்து விட வேண்டும் என்பதில் பெருந்தலைவர் காமராசரும் அதற்குப் பின் வந்த தலைவர்களும் செயல்பட்டனர். ஆத்தாளூர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மிகப் பாரம்பரியமிக்க பள்ளியாகும். இந்திய விடுதலைக்குப் பிறகு நம் பகுதியில் தொடங்கப்பட்ட முதல் பள்ளி. 1948 ஆம் ஆண்டு இப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் கோவில் வளாகத்திலே...