கல்வி வாய்ப்பைப் பெற்ற மாணவர்கள் நன்றி உணர்வோடு செயல்பட வேண்டும் - பட்டமளிப்பு விழாவில் துணை வேந்தர் பேச்சு.



தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஐந்தாவது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரை ஆற்றிய திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் எம் கிருஷ்ணன் அவர்கள் ஆற்றிய உரை, "உயர் கல்வி வாய்ப்பை பெற்ற மாணவர்கள் அதை உருவாக்கி தந்த தமிழ்நாட்டுக்கும், கல்வி வாய்ப்பை ஊரகப் பகுதிகளுக்கும் வழங்க பெரும் முயற்சி மேற்கொண்ட பெரியவர்களையும் நன்றி உணர்வோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.  முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்க  பெற்றோர்கள் மேற்கொண்ட தியாகத்தை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும்.  


பெற்ற கல்வியின் நோக்கம் கடை நிலையில் உள்ள கிராமத்தாருக்கும் அதன் பலன் சென்று சேர வேண்டும் என்பதுதான்.  


உயர் தொழில் நுட்பங்கள் ஊரகப் பகுதி மக்களுக்கும் சென்று சேர வேண்டும்.  உயர்வான வாழ்க்கை தரத்தை ஒவ்வொரு கிராம மக்களும் பெற வேண்டும்.  அதற்கு கல்வி வாய்ப்பை பெற்றவர்கள் பெரும் துணையாக நிற்க வேண்டும்.  ஊரகப் பகுதிகளின் வளங்களை பயன்படுத்தி தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.  வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பட்டம் பெற்றவர்கள் தங்கள் வாழ்வியலை அமைத்துக் கொள்ள வேண்டும்.  லண்டனில் அமைந்துள்ள அரண்மனையில் நமது திண்டுக்கல்லில் தயாரிக்கப்பட்ட பூட்டு போடப்பட்டுள்ளது.  உலக தரம் வாய்ந்த பைலட் பேனாவின் நிப்-ஐ தயாரித்து வழங்கியவர்கள் சாத்தூர் மக்கள்.  உள்ளூர் மக்களின் தொழில்நுட்பங்களுக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தர முயற்சி செய்ய வேண்டும்.  


அம்மாவுக்கு கொடு, அப்பாவுக்கு கொடு, அண்ணனுக்கு கொடு, அக்கம் பக்கத்தாருக்கு கொடு, உறவுகளுக்கு கொடு என்று கூறிவிட்டு மலர்ந்து சிரிக்க மழலையை பழக்கினோம்.  

நிகழ்காலத்தில்  பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளிடம் உனக்கு மட்டும் தான் தீனி வைத்திருக்கிறேன் யாருக்கும் கொடுக்காமல் சாப்பிட்டு என்று கூறி அனுப்புகிறோம். 

 கொடுக்கும் பண்பாட்டை, விட்டுக் கொடுக்கும் உணர்வை நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும்' இவ்வாறு உரையாற்றினார்.


கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கலையரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி தலைமை வகித்தார். 


சிறப்பு விருந்தினராக பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினார். 


விழாவில் இளங்கலை பயின்ற 1,043 மாணவர்களுக்கும், முதுகலை பயின்ற  58 மாணவர்களுக்கும்   மொத்தமாக 1,101 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. 


நிகழ்வில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா