பசுமை மனிதர் மு.சுந்தரம் ஐயா

 


"சூழலியல் பொறுப்பு  ஒவ்வொருத்தருக்கும் இருக்கணும் சார்.  நம்ம சுத்தி இருக்கிற மரங்களுடைய எண்ணிக்கை குறைஞ்சுகிட்டே  வருகிறது.  சாலைய விரிவாக்கறேன்னு சொல்லி நூறாண்டுகளுக்கு மேல இருந்த மரங்கள எல்லாம் வெட்டிப்புட்டாங்க. பசுமையா இருந்த நம்ம நகரத்த இப்ப பார்க்கும் போது ஒரே வெயில் காடா இருக்கு.  கடைத்தெருவுல நிழலுக்கு நிக்கிறதுக்கு கூட மரம் இல்ல.   மார்கழி மாச மத்தியானத்துல கூட நம்ம ஊரு பாக்குறதுக்கு சித்திரைப் போல இருக்கு.


  பாக்குற இடமெல்லாம் பச்சை படர்ந்து இருக்கணும் சார்.  அதுதான் என்னோட கனவு.   அதுக்காகத்தான் தொடர்ந்து வேலை செய்யுறேன்" பொறுப்புணர்வும் கோபமும் கொப்பளிக்க பேசுகிறார் சுந்தரம் ஐயா.


பேராவூரணி கரூர் வைசியா வங்கியில்  பாதுகாவலராக வேலை செய்யும் சுந்தரம், இப்பகுதி மக்களால் பசுமை மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.


வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் மரம் வளர்ப்பு குறித்து பேச்சு கொடுக்கிறார்.  ஆர்வம் காட்டும் மனிதர்களிடம் மரக்கன்றுகளை வழங்கி வளர்க்கச் சொல்கிறார்.  தொடர்ந்து மரக்கன்றுகளின் வளர்ச்சி குறித்து  உறவுகளை விசாரிப்பதைப் போல  விசாரிக்கிறார்.  பூத்ததா காய்த்ததா என்று இவர் கேட்கும் பொழுது இவரின் முகம் மலர்கிறது. 


"எனக்கு,  மரம் நடும் விழாவில எல்லாம் நம்பிக்கை போச்சு சார்.  போட்டோவுக்கு போஸ் கொடுக்கணும், பேப்பர்ல செய்தி வரணும்னு செய்யற வேலையா மாறிப்போச்சு.  அடுத்த வாரத்தில் போய் பார்த்தா ஆடு மாடு கடிச்சு தின்னுருக்கும்.  தண்ணியே காட்டாம கண்ணு காஞ்சி கிடக்கும்.  அதனால பொறுப்பா பாத்துக்குற மனுசங்களுக்கு பக்கத்துல மரக் கண்ணுகளை நடவு செய்கிறேன்.  கோயில், ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் இங்கெல்லாம் பாத்துக்க ஆள் இருந்தா மரக்கன்றுகளை நட்டுட்டு வற்றேன்.  இந்த பேங்குக்கு வர்றவங்க கேட்பாங்க.  அவங்களுக்கு கொடுத்து வளர்க்க சொல்வேன்.  கண்ணு கொடுத்த இடத்தில் எல்லாம் எப்படி வளருதுன்னு கேட்டுகிட்டே இருப்பேன்.   நா வச்ச மரமெல்லாம் இந்தப் பகுதியில் உள்ள கோயில் பள்ளிக்கூடம் மருத்துவமனைன்னு எல்லா எடத்திலேயும் வளந்து நிக்குது.  சாலை ஓரங்கள்லயும் மரங்களை நட்டு பக்கத்துல உள்ள வீட்டுக்காரர்களையோ கடைக்காரங்களையோ பார்த்துக்க சொல்லிடுவேன்.  என் வாழ்நாள் முழுக்க இந்த வேலையை செஞ்சுக்கிட்டே  இருப்பேன்.  எனக்கு தோணுன இந்த எண்ணத்தை ஒவ்வொரு நாளும் யாராவது ஒருத்தருக்கு தோண வச்சுருவேன்.  எல்லாரும் நினைச்சா நம்ம மண்ண பசுமையா மாத்தலாம்.


சின்ன புள்ளைங்க கிட்ட பூச்செடிகளை கொடுத்து வளர்க்கச் சொல்லுவேன்.  செடிகள்ல பூத்துச் சிரிக்கும் பூக்களை பார்த்து செடி வளர்க்கும் ஆர்வம் சிறுவர்கள்ட்ட வந்துரும்.  பள்ளிக்கூடங்கள்ல வச்ச செடிகளை எல்லாம் மரமா மாத்துனது மாணவர்கள்தான்.  அவங்க கிட்ட நம்ம மண்ணோட சூழலை எடுத்துச் சொன்னா அவங்க மாத்துவாங்க சார்.  மரம் வளர்க்கிறதுக்கும் மதிப்பெண் வழங்கனும்.  அப்படி செஞ்சா ஊரே பசுமையா மாறி போகும்",  நம்பிக்கையையும் சேர்த்து விதைக்கிறார்.


மணமக்களுக்கு செண்பகம்,

கோவில்களில் மகிழமரம், அத்திமரம்,

சாலை ஓரங்களில் புங்க மரம், வேப்பமரம்,

பள்ளிக்கூடங்களில் மகிழ மரம் என்று எங்கெல்லாம் என்னென்ன மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.


திருச்சிற்றம்பலம் தான் சுந்தரம் ஐயாவின்  சொந்த ஊர்.  இருந்தாலும் இவருக்கென்று ஒரு சென்ட் நிலம் கூட சொந்தமாக இல்லை.  வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார்.  பிள்ளைகளின் படிப்பு செலவு, வீட்டுச் செலவு, வீட்டு வாடகை என தன்னின் தேவைகளை தாண்டி செடிகளை வழங்குவதற்காக தனது வருவாயின் பெரும் பகுதியை செலவு செய்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணியை செய்து வருகிறார்.  


உலகம் வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் குறித்தெல்லாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய காலகட்டத்தில் சுந்தரம் ஐயாவின் செயல் போற்றுதலுக்குரியது.  


இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று சுந்தரம் ஐயாவிற்கு சொந்தமாக வீடு வழங்கிட ஆவணம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது மெய்ச்சுடர்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா