உறவுக்கு உதவியே ரோஜா செடி - நூல் விமர்சனம்



மேலூர் மு.வாசுகி அவர்களின் எழுத்தில் உருவான முதல் சிறுகதைத்தொகுப்பு "உறவுக்கு உதவிய ரோஜா சேடி".


33 விழுக்காடு இட ஒதுக்கீடு, கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை என பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும் எழுத்துலகில் பெண் படைப்பாளர்கள் எண்ணிக்கை இன்றும் ஒப்பிட்டு அளவில் மிகவும் குறைவாகவே உள்ளது.


அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண் படைப்பாளர்கள் பரவிக் கிடக்கிறார்கள்.  இவர்களின் தன் எழுச்சியான படைப்பாக்கங்கள் சமூகத்திற்கு நல் விளைவுகளையும் பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பையும் தருகிறது. 


பென் படைப்பாளர்களை கொண்டாடுவதும் அவர்களின் படைப்புகளை தொடர்ந்து பரப்புவதும்  சமூகத்தின் கடமையாகும்.


தனது நான்கு நூல்களை கவிதை நூல்களாக படைத்தளித்த கவிஞர் வாசுகி தனது ஐந்தாவது நூலை சிறுகதைத் தொகுப்பாகத் தந்திருக்கிறார்.


நம் அருகில் நடக்கும் நிகழ்வுகளை, பார்த்த சம்பவங்களை தனது சிறுகதைகளில் படிப்பினையாக மாற்றித் தந்திருக்கிறார். 


நூலின் தலைப்புக்கு உதவிய சிறுகதை சமூக மாற்றத்திற்கான விதையாக அமைகிறது.  வணிகமாகிப்போன வாழ்வியல் சூழலில் உறவுகளை கூவி அழைக்கும் காலத்தில் உறவுகளை மேம்படுத்திக் கொள்ள பசுமையை பயன்படுத்த வழியமைத்து தருகிறார் வாசுகி.  


சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஈரம் கசிந்த அன்பையும்,  மதங்களைக் கடந்த மன உணர்ச்சிகளையும், சமூகத்தில் கொட்டிக் கிடக்கும் விரக்தி, ஏமாற்றம், தோல்வி இவைகளுக்கு மத்தியில் தன்னம்பிக்கையோடு மனிதத்தை பேசும் மனிதர்களையும் அடையாளம் காட்டுகிறது.


கருப்பு கோமாளியாக வரும் செல்வந்தர் தனது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் செல்வந்தராகவே வாழ்ந்து மறைகிறார்.


வாடகை வீட்டின் வாழ்வியலை, அருகருகே வசிக்கும் அண்டை வீட்டாரின் அன்பை அனைத்து கதைகளிலும் தரிசிக்க முடிகிறது.


இறப்பின் நேரத்தில் வாடகை வீடுகளில் நிகழ்ந்துவிடும் இயலாமை துயரத்தை பேசுகிறது.  


பெற்றோர்களின் உழைப்பை அன்பை பிள்ளைகளுக்கு ஊட்டுகிறது.


திருமணமாகாத இளைஞர்களின் உணவு சிக்கலை உளவியல் சிக்கலை காகித மேஜை வீடு என்ற சிறுகதை வெளிப்படுத்துகிறது.


சிறுவயதிலேயே ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய மான உணர்வை பேசுகிறது.


எளிய மக்களிடம் தொன்று தொட்டு இருந்து வரும் கொடுக்கல் வாங்கல், நகையை அடகு வைத்து வாழ்க்கையை நகர்த்துதல் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன.  


நல்லதையே செய்து வாழும் மனிதர்களுக்கு சக மனிதர்களால் வழங்கப்படும் ஆச்சரியங்கள் குறித்து கம்மல் என்ற சிறுகதை நம்மோடு உரையாடுகிறது.


பெட்டிக்கடை வைத்திருக்கும் பாட்டியும்,  உடல் நலம் பாதிக்கப்பட்டால் உதவிட முன் வரும் பக்கத்து வீட்டாரும்தான் உறவு பாலம், முதல் சொந்தம் என்பதை உணர்த்துகிறது.   


நூலில் உள்ள 16 கதைகளும் 16 உணர்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறது.  எளிய எழுத்து நடை, உயரிய நோக்கம் எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.  தனது முதல் சிறுகதைத் தொகுப்பிலேயே முற்போக்கு முகம் காட்டி இருக்கிறார்.


புகழ்மிக்க மணிமேகலைப் பிரசுரம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.  


பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் இந்த நூல் வாசிக்க கிடைக்கிறது.  வாசிப்பை நேசிப்போம் வாருங்கள்.

ஆசிரியர்,

மெய்ச்சுடர்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா