தூக்குக் கயிற்றின் மரணம்

 


1996 இல் முதல் பதிப்பு கண்டு 2023 இல் மூன்றாம் பதிப்பாக ஓவியா பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் "தூக்கு கயிற்றின் மரணம்"


பகத்சிங் வாழ்க்கை வரலாற்றை கவிதை வடிவில் வடித்திருக்கிறார் அன்புத் தோழர் எஸ் கவிவர்மன். 


மூன்று பதிப்புகள் கண்டும் இப்பொழுதுதான் இந்த நூலை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.  அன்புத் தோழரின் கரங்களிலிருந்து நூலைப் பெற்று படித்து முடித்தேன்.   



சமகால இளைஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய வரலாற்று நூல்.  பகத்சிங்கை படி எடுக்க இந்த புத்தகத்தை படித்து விடுங்கள்.  


ஈகம் மனித வடிவில் வாழ்ந்த வரலாற்றை வாசிப்பவர் மனதுக்குள் மறு பதிப்பு செய்து விடும் புத்தகம்.  


"இடும்பைக்கு இடுப்பைப் படுப்பர்..." வள்ளுவர் வார்த்தெடுத்த வரிகளை வாழ்வியலாகக் கொண்டவனின் வரலாற்றை "தூக்குக் கயிற்றின் மரணம்" என்று தலைப்பிட்டு தந்திருக்கிறார் ஆசிரியர்.


இருட்டுக்குள் கிடந்த இந்தியாவில் செம்பூக்கள் மலர வைக்க மாவீரன் செய்த ஈகம்,  ஈர உள்ளம் கொண்டவர்களை ஈகம் செய்யத் தூண்டும்.


"அவனைப் பள்ளிக்கனுப்பிய

பாலப் பருவம்

தாயின் நெஞ்சில்

தைத்தது"  வரிகள் வாசிப்பவர் நெஞ்சங்களையும் தைத்து விடுகிறது. அகிம்சைக்கு புதியதோர் பொருள் சொன்ன வரிகள்.


உங்களின் 

உதவியோ 

சலுகையோ 

கருணையோ 

எங்களுக்கு 

அனாவசியம்... ஆதிக்கத்தை அதிர வைக்கும் சுயமரியாதை சொற்கள் நிரம்பிக் கிடக்கிறது புத்தகமெங்கும்.  


மன்னிப்பு கேட்டு மானத்தை விற்றவர்களின் ஈன வாழ்க்கை விடுதலை வரலாறாய் மாற்றப்பட்டு வரும் காலத்தில்...


"எங்களைப் 

போர் வீரர்களைப் போல் 

நெஞ்சில் சுடுங்கள் 

சந்தோசமாய் சாவோம்...!" என்ற மாவீரனின் வார்த்தைகளை வரலாறாய் வார்த்தெடுத்த நூல்.


வாசிப்பவர்கள் நெஞ்சில் வீரம் பிரவாகமாய்  ஊற்றெடுப்பதை ஒவ்வொருவரும் உணர முடியும்.


தடுமாற்றம் இல்லாத தியாக வாழ்வை "தூக்கு கயிற்றின் மரணம்" நூல் வாசிப்பவர்களிடமும் தியாக உள்ளத்தை நெய்து விடுகிறது.  


"என் 

மரணம் 

ஆயிரம் பகத்சிங்குகளை 

ஆக்குவதற்காக!

ஏகாதிபத்தியத்தை 

எதிர்ப்பதற்காக!"  


பகத்தின் வார்த்தைகள்

பொய்த்துப் போகாது!

ஆதிக்கத்திற்கு எதிரான

புதிய பிறப்பை வாசிப்பவர்

உள்ளத்திற்குள் பிறப்பிக்கும்! அது

பகத்சிங்கை போலவே 

வீரஞ்செறிந்த விளைவித்தரும்!


வாசித்து விடுங்கள் தோழர்களே!

நூலை பெற்றுக்கொள்ள 

அழைக்கவும் : 9443420444.

கருத்துகள்

  1. மிகுந்த மகிழ்ச்சி என் மகள் மதிப்பீடு என்னை இன்னும் எழுதத்தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா