தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் கோரிக்கைகள் அனைத்தையும் தமிழர்களுக்காக செயல்படும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் - இயக்க மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி.




தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் 7-வது மாநில மாநாடு திருச்சி தமிழ்ச் சங்க மன்ற அரங்கில் திருவள்ளுவர் ஆண்டு 2053 மீனம் 20 ஞாயிறு (03.04.2022) அன்று சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசு பொய்யாமொழி "இந்த மாநாட்டை திருச்சியில் நடத்துவது மிகவும் பொருத்தமானது. முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி திருச்சி மாவட்டம் பல சிறப்புகளை கொண்டது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழர்கள் பெருமை கொள்ளும் ஆட்சி தமிழ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் கோரிக்கைகளை நீங்கள் கேட்காமலேயே தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.  


திராவிட முன்னேற்றக் கழகம் மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்சிக்கு வந்தது. மொழிசார்ந்த உங்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துச் செல்வேன். கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிட அனைத்து முயற்சிகளையும் செய்வேன்" என்றார்.


இயக்கத்தின் தலைவர் அ.சி.சின்னப்பத்தமிழர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ.இருதயராச், பெரும்கவிக்கோ வாமுசெ, சிவ.செந்தமிழ்வாணன், மருத்துவர் துரை. நீலகண்டன், பழ.தமிழாளன், க.அன்பரசு, இரா.இசுடாலின், ந.பிரபாகரன், சு.இளங்கோ, ப.மாணிக்கம், சீனி.விடுதலை அரசு, துரை.சித்தார்த்தன், புதியவன், ந.ரெத்தினம் ஆகியோர் உரையாற்றினர்.


முன்னதாக மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் வரவேற்றார், நிறைவாக சொ. சிவியர் நன்றி நவின்றார்.


மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இந்த மாநாட்டில் மூன்று தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.


கட்டாய தமிழ்க் கல்வி, ஆட்சி உரிமைச் சட்டம் என்ற தலைப்பில் புலவர் சிலம்பூர்கிழான், செல்வமணியன், முனைவர் பா.சண்முகப்பிரியா, நாவை சிவம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.


தமிழ்வழிப் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை என்ற தலைப்பில் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புலவர் வை.தேனரசன், திருக்குறள் பேரவை பழனியப்பன், கல்லை தமிழ்ச் சங்கம் மதிவாணன், இலக்கிய வளர்ச்சிக் கழகம் எண்கண் சா.மணி, நல்லாசிரியர் மு.சிவானந்தம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.


உயர்கல்வி அனைத்தும் தமிழ் வழியில் வேண்டும் என்ற தலைப்பில் வழக்கறிஞர் கு.ஞா. பகவத்சிங், முனைவர் ம. சிவராமன், முனைவர் ச.கணேசுகுமார், முனைவர் அ.தமிழ்க்குமரன், வழக்கறிஞர் செந்தமிழ்ச்செல்வன், த. பழனிவேல் ஆகியோர் உரை நிகழ்த்தினர். 


கல்வி முற்றுரிமையும் மாநிலப் பட்டியல் வழி தமிழ்நாட்டுக்கே வேண்டும்!


தமிழே ஆட்சி மொழி! தமிழை கல்விமொழி!


தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை மற்றும் உயர்கல்வி வேலை வாய்ப்புக்கு உறுதி செய்க!


தமிழ் - தமிழ் நாட்டின் இறையாண்மை மிக்க மொழியாக்க வேண்டும்! 


தமிழ்வழிக்கல்வியை கட்டாயமாக்கித் தமிழ் பயிற்றுமொழி சட்டம் இயற்றி மழலைக்கல்வி முதல் மருத்துவம், பொறியியல், சட்டம், பல்துறை ஆய்வுக் கல்வி அனைத்தையும் தமிழில் நடைமுறைப்படுத்த வேண்டும்! 


அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஆங்கில மொழி வகுப்புகளை விலக்கிவிட்டு தமிழ்வழி வகுப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும்! 


அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியும் அடிப்படை வசதிகளும் கிடைப்பதற்கு உறுதி செய்ய வேண்டும்!


மாவட்டம் தோறும் தமிழ் மருத்துவக் கல்லூரிகளை நிறுவ வேண்டும்! 

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் இயற்றப்பட்டது.


உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

https://youtu.be/zThrHV25f44 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா