தமிழ் மணம் பரப்பும் தாழம்பூ

 தமிழ் மணம் பரப்பும் தாழம்பூ


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், சுப்பிரமணியபுரம் அஞ்சல், விஜயபுரம் கிராமத்திலிருந்து தமிழ் மணம் பரப்பி வருகிறது தாழம்பூ என்கிற பல்சுவை இலக்கிய இருமாத இதழ்.

383 இதழ்களை கடந்து இரண்டு தலைமுறை இலக்கிய ஆர்வலர்களின் இதயம் தொட்டு, இன்றும் தொடர்கிறது.

இலக்கிய இதழ் நடத்த வேண்டும் என்ற ஆசையும் இலக்கிய ஆர்வமும் கொண்ட பலர் தொடங்கி துவண்டுபோன இதழியல் துறையில், இந்த இதழ் பல இடர்களைத்தாண்டி இன்றும் கையெழுத்து இதழாக இலக்கியம் பேசி வருகிறது.

1977 இல் தனது பள்ளி இறுதியாண்டில் தொடங்கிய இதழ் நடத்தும் பணியை தனது 62 ஆவது அகவையிலும் தொய்வின்றி தொடர்ந்து வருகிறார் இதழின் ஆசிரியர் தாழம்பூ கோவிந்தராஜன். பாரம்பரிய சித்தமருத்துவரான இவர் இலக்கய ஆர்வத்துடன் தொடர்ந்து நடத்திவரும் தாழம்பூ சிற்றிதழை அறியாத இதழாளர்கள் யாரும் தமிழ்நாட்டில் இருக்க வாய்ப்பில்லை.



படியெடுக்கும் வசதி இல்லாத தொடக்க காலத்தில் கார்பன் தாள் கொண்டே இதழ் தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார் ஐயா கோவிந்தராஜன்.

தற்போதும் மூலப்படியை கையெழுத்தில் தயாரித்துவிட்டு படி எடுத்து இதழை தயாரித்து வருகிறார்.

பலவண்ணத்தில் பளபளக்கும் தாள்களில் பல இதழ்கள் வந்தாலும் ஆசிரியரின் சிந்தையில் விளைந்த சிந்தனையை தனது கரத்தின் வழியே கடத்திவந்து கையெழுத்துப் பிரதியாகவே தரும் தாழம்பூவின் நறுமணம் தனிச்சுவை.

கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், ஓவியங்கள், நேர்காணல், புத்தக அறிமுகம், வாசகர் கருத்துகள் என பலசுவைகளையும் பக்கம் பக்கமாக அடுக்கி சுவை கூட்டுகிறார் ஆசிரியர்.

பல கலைஞர்கள் ஒன்றுகூடி உருவாக்கும் வெகுமக்கள் அச்சு ஊடகத்தோடு போட்டி போடும் வகையில், ஒவ்வொரு பக்கத்தையும் ஒரு சிற்பியைப் போல செதுக்கி சிறப்பு சேர்க்கும் இவரின் இதழியல் கலை அபாரமானது.

உலகின் மூலைமுடுக்குகளில் சத்தமில்லாமல் சாதனைகள் புரிந்த பலரையும் தனது இதழின் வழியாக அறிமுகம் செய்து உலகறியச் செய்து வருகிறார்.

தமிழ்நாட்டில் இவரின் இதழ் இல்லாத சிற்றிதழ் கண்காட்சிகளே கிடையாது. சிற்றிதழ் செல்வர், சுகன் சிற்றிதழ் விருது, தமிழ் ஞாயிறு, சிற்றிதழ் காவலர் என தமிழ் கூறும் நல்லுலகின் நல்லறம் பேணும் அமைப்புகள் இவருக்கு விருதுகளை வாரி வழங்கியுள்ளன.

இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு அகவை முதிர்ந்த தமிழறிஞர் என்ற விருதினை வழங்கி சிறப்பு சேர்த்திருக்கிறது.

குறைந்த விலையில் அச்சுப் படியெடுக்க திருச்சி வரை அலைந்து இந்த கையெழுத்து இதழை ஒவ்வொரு முறையும் உருவாக்கி வருகிறார்.


இன்றைய நவீன இதழியலின் தொடக்கமாகப் பார்க்கப்படும் கையெழுத்து இதழியலின் கடைசிப் பதிப்பாக வெளிவரும் தாழம்பூ இதழை தலைமுறை கடந்து எடுத்துச்செல்லும் ஆசிரியரின் பணி தொடர வாழ்த்துவோம்.

இப்பணி தொய்வின்றி தொடர இவரிடம் ஒரு படியெடுக்கும் கருவி (ஜெராக்ஸ்) இருந்தால் வசதியாக இருக்கும். உதவுவோம்...

இதழ் பெறவும், இவரின் இதழியல் பணிக்கு உதவி செய்யவும் ஐயா கோவிந்தராஜன் அவர்களோடு பேச 9688013182 என்ற கைபேசியில் தொடர்புகொள்ளுங்கள்.

ஆசிரியர்,
மெய்ச்சுடர்.

இதழின் சில பக்கங்கள்
----------------------------------------







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா