பொலிவிழந்து வரும் மண் பானை தொழில்

 பொலிவிழந்து வரும் மண் பானை தொழில்



மனித நாகரிகத்தின் அடையாளம் உலகின் மூத்த தொழில் மண் பானை செய்யும் தொழில் தற்பொழுது நலிந்து வருகிறது.
பிறப்பிலிருந்து இறப்பு வரை பண்பாட்டு அடையாளமாக மண்பாண்டங்கள் இருந்து வருகிறது.
கீழடி ஆய்வின் அடையாளமாக தமிழ் மொழியின் தொன்மத்தின் தரவுகளாக இன்றும் நம்மிடம் இருப்பது மண் பானை ஓடுகள்தான்.
சிந்து முதல் குமரி வரை தமிழர்களின் நாகரீக அடையாளமாக மண்பாண்டத் தொழில் இருந்து வருகிறது.
தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் விழா மண் பானைகள் இல்லாமல் சிறக்காது. வேளாண் குடிகள் பொங்கல் வைக்கும் விழாவை மண்பானைகளை கொண்டே வைப்பார்கள். சாதாரண புழங்கு பொருட்களாக இருந்த மண்பானைகள் பொங்கல் விழாவின் அடையாளமாக மாறிப் போனது. காலப்போக்கில் அதுவும் மறைந்து வெவ்வேறு உலோகப் பானைகளில் பொங்கல் வைக்கும் பழக்கத்தால் மண்பானைகளில் புழக்கம் குறைந்து வருகிறது.
மண் பானைகளின் அருமை பெருமைகளை அதன் மருத்துவ குணங்களை சமகால தலைமுறை தெரிந்து வைத்திருந்தாலும் அதன் பயன்பாடு இன்னும் அதிகரிக்கவில்லை.
இந்நிலையில் பொங்கல் விழாவை மையப்படுத்தி நடைபெறும் சொற்பமான பானை செய்யும் தொழிலும் இந்த ஆண்டு மிகவும் நசிந்து போய் உள்ளது.
பேராவூரணி வட்டாரம் மற்றும் தஞ்சை மாவட்டத்தை சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பேராவூரணி நீலகண்ட புரம் இப்பகுதியில் உற்பத்தியாகும் பானைகள்தான் மிகவும் பிரபலம்.
வண்டி கட்டிக் கொண்டு ஊர் ஊராய் சென்று பானைகளை விற்றுவரும் நடைமுறை தற்போது முற்றிலும் மறைந்து விட்டது.
இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக கோவில் விழாக்கள் நடத்தப்படாததால் மண்பாண்ட குதிரை செய்யும் பணியும் இல்லாமல் போனது. விநாயகர் சதுர்த்தி காலத்தில் மண்ணால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் செய்யும் பணி இந்த ஆண்டு முற்றிலும் முடங்கியது.
கார்த்திகை மார்கழி மாதம் முழுவதும் மழைப்பொழிவு இருந்ததால் மண் எடுக்க முடியாமல் போனது. சேமித்து வைத்திருந்த மண்ணைக் கொண்டு மண்பாண்டங்கள் செய்து அவற்றை சுட முடியாமல் தவிக்கும் நிலை தொடர்கிறது. விறகுகள் தென்னம் மட்டைகள் முற்றிலும் நனைந்து காணப்படுவதால் பானைகளை வேக வைக்க முடியாமல் தவித்து வருகிறார்கள் மண்பாண்ட தொழிலாளர்கள்.
இந்தியாவின் முகமாக தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக உள்ள மண் பானைகள் செய்யும் தொழில் சிறக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
நலவாரியத்தில் பதிவு செய்த பல தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்கிறார் மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க தலைவர் பழனிவேல் சங்கரன்.
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாகவும் பண்பாட்டின் தொடர்ச்சியாகவும் பல மருத்துவ குணங்களை கொண்ட மண்பாண்டங்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் அவல நிலையை அனைத்து ஊடகங்களும் மக்களுக்கும் அரசுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் சக்திவேல் சங்கரன்.
மத்திய மாநில அரசுகள் மண்பாண்ட தொழிலுக்கு உரிய நிதி ஆதாரங்களை வழங்கியும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்கியும் தொழிலாளர்களுக்கு விழாக்கால நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும்
மெய்ச்சுடர்
கோரிக்கை வைக்கிறது.













கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா