பணி வாய்ப்புகள் இல்லாத பாடங்களுக்கு பி.எட்.

பணி வாய்ப்புகள் இல்லாத பாடங்களுக்கும் பி.எட்.


ஆசிரியர்கள் பணிவாய்ப்பில்லாத, பள்ளிகளில் நடத்தப்படாத பாடங்களுக்கெல்லாம் பி.எட். படிக்கும் வாய்ப்பினை வழங்கி வருகின்றன தமிழகப் பல்கலைக்கழகங்கள். 

பொதுவாக பள்ளிகளில் தேவைப்படும் பாடங்களுக்கு மட்டுமே ஆசிரியர்களை உருவாக்கித் தரும் வேலையை, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள், செய்து வந்தன. தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் பட்டம் வழங்கும் பொறுப்பைத் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதோடு தமிழக பல்கலைக்கழகங்களும் பி.எட்., பட்டப் படிப்பினை வழங்கி வருகின்றன.

                இப்பல்கலைக்கழகங்கள் பள்ளிகளில் ஆசிரியர்களே தேவைப்படாத பாடங்களுக்கும் பி.எட். படிப்பை வழங்கிவருவதால், இப்படிப்பிற்குப்பின் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

                இதுவரை வணிகவியல், பொருளாதாரம், அரசியல் போன்ற பாடங்களில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் பி.எட் படிக்க முடியாது. ஏனென்றால் பத்தாம் வகுப்பு வரை இப்பாடங்கள் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுவதில்லை. மேல்நிலை வகுப்புகளுக்கே வணிகவியல், பொருளாதாரம், அரசியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படும். இப்பாடங்களைக் கற்பிக்க முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களே தேவைப்படுவார்கள். எனவே இப்பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே பி.எட் படிக்க முடியும். இதனால் வேலைவாய்ப்பில் சிக்கல் இல்லாத சூழல் இருந்து வந்தது. 

                ஆனால் தற்போது, கணினி பயன்பாட்டியல், கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பவியல், உயிரி இயற்பியல், உயிரி வேதியியல், உயிரி நுட்பவியல், நுண்ணுயிரியல், தாவர உயிரியல், பயன்பாட்டு வேதியியல், பயன்பாட்டு புவியியல், புவி இயற்பியல், பயன்பாட்டு இயற்பியல், மின்னணுவியல் போன்ற பாடங்களில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள், பி.எட் படிக்க முடியும் என்ற நிலையை பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தியுள்ளன. 

                பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை மேற்கண்ட பாடங்கள் கற்பிக்கப்படுவதில்லை. அதனால், மேற்கண்ட புதிய பாடங்களில் இளநிலைப் பட்டம் பெற்று பி.எட்., படித்து முடித்த பட்டதாரி இளைஞர்கள் TET தேர்வு எழுத முடியாது. தனியார் பள்ளிகளில் சென்று வேலை செய்வதற்கும் வாய்ப்பில்லை.

   பட்டதாரி ஆசிரியர்களான இவர்களுக்கு உரிய பணியிடம் பள்ளிகளில் உருவாக்கப்படாமலேயே பல்கலைக்கழகங்களால் பி.எட். பட்டப் படிப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 

                ஆய்வு நோக்கில், நுணுக்கமாக கற்க வேண்டியதன் அவசியம் கருதி, தொடக்கத்தில் இருந்த ஒரு சில பாடங்கள், விரிவடைந்து மேற்கண்ட வெவ்வேறு புதிய படங்களாக மாற்றம் கண்டது. தன் விளைவாக பல்கலைக்கழகங்களால் இப்புதிய பாடங்களுக்கான இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டு மாணவர்கள் சேர்த்துக்கொள்ப்பட்டார்கள். புதிய தலைப்புகளில் உருவான இந்த பட்டப் படிப்புகளில் சேர்ந்து படித்திட ஆயிரக்கண்க்கான இளைஞர்கள் ஆர்வம் காட்டினார்கள். 

                இச்சூழலில்தான் பல தனியார் கல்வியியல் கல்லூரிகள், ஆய்வு நோக்கத்திற்காகப் உருவாக்கப்பட்ட புதி பாடங்களில் இளநிலை பட்டம் பெற்றதும் பி.எட்., படிக்கலாம் என்ற நிலை ஏற்படுத்தின. எளிதில் வேலைவாய்ப்பைப் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆசிரியர் ஆகும் கனவுகளோடு பி.எட் படித்துவிட்டு, தற்போது தனது வாழ்க்கையை இழந்து நிற்கிறார்கள். 

இளநிலைப் பட்டப்படிப்பிற்குப் பிறகு பி.எட். பட்டம் பெற்றவர்கள் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற முடியும் என்ற நிலையை மறந்து, பணிவாய்ப்பே இல்லாத பாடங்களுக்கெல்லாம் பி.எட். படிக்க வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்ததன் விளைவாக வேலையில்லாத நிலை அதிகரித்து வருகிறது. 

      இதைப்போலவே தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் ப்பிரி பிரைமரி டீச்சர் டிரைனிங் என்ற கல்வியில் பட்டயப் படிப்பு வழங்கப்பட்டு வருகிறது. இப்படிப்பை பயின்ற பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பற்று இருக்கிறார்கள். 


பள்ளிகளில் புதிய பாடங்களைச் சேர்த்து அதற்கான பணியிடங்களை ஏற்படுத்திக் கொடுப்பதாலும், மழலையர் பள்ளிகளை அரசே தொடங்கி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கிக் கொடுப்பதாலும் மட்டுமே இந்த அசாதாரண சூழலைச் சரி செய்ய முடியும். செயல்படுத்துமா அரசு?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா