எளியவர்களின் குலதெய்வக் கோயிலாய் புதுப்பொலிவு பெற்ற பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம்.

வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து பாருங்க! 


புதுப்பொலிவு பெற்றது பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம்.
------------------

"குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் 
சுற்றமாச் சுற்றும் உலகு"
சுற்றம் சூழ்ந்திட குற்றமற்றவர்களாய் வாழும் வகை சொல்லும் திருக்குறள் கூறி வட்டாட்சியர் அலுவலக முதன்மை கட்டிடத்தில் முகம் காட்டி நம்மை வரவேற்கிறார் வள்ளுவப் பெருந்தகை.  


முதன்மை கட்டிடத்திற்குள் நுழைந்ததும் வள்ளுவர் வாசகப் பூங்கா நல்வரவு சொல்கிறது. இங்கு பல்வேறு தேவைகளுக்காக அலுவலகம் வருபவர்கள் அமர்ந்து நாளிதழ்களை வாசித்துக் ​கொண்டிருக்கிறார்கள்.


கட்டடத்தின் முதல் தளத்திற்கு செல்லும் வாயிலில் தாகத்திற்கு தண்ணீர் வழங்குவதற்காக அ​மைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பான் பார்வைக்காக இல்லாமல், உண்மையிலேயே இயங்குகிறது...


அருகிலேயே உள்ள தகவல் பலகை புதுப்புது செய்திகளை அறிவிக்கிறது...


எந்தப் பணியை எந்த இருக்கையில் உள்ள அலுவலரை சந்தித்து பெற வேண்டும் என்று வழிகாட்டுகிறது ஒவ்வொரு இருக்கைக்கு முன்பும் உள்ள அறிவிப்பு பலகை...


கட்டிடத்தின் எந்த மூலையிலும் குப்பைகள் இல்லை... சுவர்களில் பூச்சுகள் உதிரவில்​​லை...

வட்டாட்சியர் வளாகம் வண்ணம் பூசப்பட்டு பளிச்சிடுகிறது.
பணி சூழல் பசுமை சூழ்ந்து காணப்படுகிறது...


அலுவலகத்திற்கு மேற்கு புறமும் வடபுறமும் அடர் மரங்கள் சூழ்ந்து நிழல் பரப்பி நிற்கிறது. மர நிழல் நடுவில் பூங்காவில் அமைக்கப்படும் கல் இருக்கைகள்  மக்களை மகிழ்விக்கிறது...


அலுவலகத்திற்குள் அலுவலகப் பணிக்கு இடையூறாக இருந்த கூட்ட அரங்கம் முதன்மை கட்டடத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கிறது...


கூட்ட அரங்கம் கணினி அறையாக மாற்றம் கண்டிருக்கிறது...


முதல் தளத்தில் அமைந்திருந்த ஆதார் மையம் தேடி முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும்  பாதம்​நோகப் படி ஏறத் ​தே​வையில்​லை.

அவர்களின் வசதிக்காய் வாசலிலேயே வழிவகை செய்யப்பட்டுள்ளது...


அலுவலகத் தரைத்தளம் பளிங்கி கற்களால் பளபளக்கிறது...


குப்பையாய் குவிந்து கிடந்த அறைகள் எல்லாம் மாற்றம் பெற்று மாவட்ட ஆட்சியரே அங்கு வந்தமர்ந்து மக்களின் மனுக்களை ​பெற்ற​தை ​பேராவூரணி ஜமபந்தி நிகழ்வில் பார்க்கமுடிந்தது...


குடிமனை இல்லாதவர்களின் குறைதீர்க்கும் கோவிலாக வட்டாட்சியர் அலுவலகம் காட்சி தருகிறது...


குடும்ப அட்டை இல்லாதவர்களின் குறைகள் உடனே இங்கு தீர்க்கப்படுகிறது...


பாதையின்றி தவிப்பவருக்கு வழி பிறக்கிது...


மயானத்திற்கு வழி விட மறுத்தவர்கள் எல்லாம் மன மாற்றம் அடைந்தது இங்குதான்...


இதுவரை இங்கு இவ்வளவு அமைதிப் பேச்சு வார்த்தைகள் நடந்ததில்லை...

 
குறைதீர் கூட்டங்களுக்கு பின் கொண்டாட்டங்கள் மலர்கிறது...


கோவில் சிக்கல்கள் கூட இங்கு கூடிப் பேசி தீர்க்கப்படுகிறது...


இங்கு குடிகள் மாநாடு நடந்தால் மாவட்ட ஆட்சியரை மலர்ந்த முகத்தோடு வந்தமருகிறார்...


அதிகார தொணி இல்லை..
அகங்கார எண்ணம் இல்லை... 
அனைவரும் ஏவலின்றி பம்பரமாய் சுழன்று பணி செய்கிறார்கள்...


அலுவலர்கள் புன்னகை பூத்த முகத்தோடு ஐயா! அம்மா! என்று அழைத்து குடிமக்களின் குறைதீர்க்கிறார்கள்...


பேராவூரணி வட்டத்து மக்களின் பெரும் நம்பிக்கைக்கீற்ராய் நற்பெயர் பெற்று வளர்கிறது வட்டாட்சியர் வளாகம்...


நீங்க நல்லா இருக்கணும் ஐயா!
உங்க புள்ள குட்டி எல்லாம் நல்லா இருக்கணும் சாமி! இந்த வார்த்தைகள்  எளியவர்களின் உள்ளத்தில் இருந்து உதிர்கிறது...


உயர்திரு த. சுகுமார். பேராவூரணி வட்டாட்சியர்.
இவை அத்தனைக்கும் ஆதாரப் புள்ளி இவர்தான்...


உழைக்கும் மக்களின் உணர்வுகள் அறிந்து செயலாற்றி வருபவர்...


பாட்டாளி மக்களின் பண்பறிந்து,
வட்டத்து மக்களின் வசதிகளை மேம்படுத்த பம்பரமாய் சுழன்று பணியாற்றி வருகிறார்...


எட்டுத்திக்கும் புகழ் மணக்க செயல்பரப்பி வாழ்கிறார்.


குடிமக்களிடமிருந்து பெறும் விண்ணப்பங்களுக்கு பதில் செய்ய வேண்டும் என்ற அறபண்பு அறிந்தவராய் ​செயலாற்றி மகிழ்கிறார்.


பொதுமக்கள் நலன் போற்றிட பெற்ற பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி வருபவர்..


இவர் உருவாக்கி வரும் திருவள்ளுவர் புரங்கள், தெருவில் வாழும் மக்களுக்கு வாழ்விடங்களாய் காட்சி தருகிறது. 


செந்தமிழ் பெயர்களில் பல தெருக்களை உருவாக்கி புதிய பண்பாட்டு மாதிரியை பேராவூரணியில் தொடங்கி இருக்கிறார்...


ஊழலற்ற நிர்வாகம்!
ஊருக்கு உழைக்கும் செயலூக்கம்!..  அடுத்த தலைமுறைக்கும் தொடர வேண்டும் என்ற நோக்கில் இவர் உருவாக்கி வரும் திருவள்ளுவர் போட்டித் தேர்வு பயிற்சி கூடங்கள் நாளைய அரசு அதிகாரிகளை நல்ல வண்ணம் தயாரித்து வருகிறது...


திருவள்ளுவர் வழிப்பற்றி நாளெல்லாம் பணிசெய்யும் பேராவூரணி வட்டாட்சியரின் செயல் நாடெல்லாம் பரவ வேண்டும். இதுதான் மெய்ச்சுடரின் விருப்பம். நற்குடிமக்களின் விருப்பமும்கூட.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா