இருளர் வாழ்வின் வெளிச்சம் ஜெய்பீம்
இருளர் வாழ்வின் வெளிச்சம் ஜெய்பீம்
ஒரு நல்ல படைப்பின் நோக்கம் சமுதாயத்தில் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையில் சிறு தாக்கத்தையேனும் ஏற்படுத்த வேண்டும்.
ஜெய் பீம் - இந்தத் திரைப்படம் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப் பெரியது. ஆனால் இருளர்களின் வாழ்வியல் சிக்கலோ அதையும் விட பெரியது.
தமிழ்ச் சமூகத்தில் தொல்குடி சமூகமான இருளர் வாழ்வியலை கண்முன் நிறுத்தி நீதி கேட்கிறது இந்த திரைப்படம்.
நீதியின் பார்வையில், காவல்துறையின் பார்வையில், ஓட்டு வாங்கும் தேர்தல் அரசியல்வாதிகளின் பார்வையில், மார்க்சிய அரசியல் பார்வையில் என பன்முகப் பார்வையில் இந்த நாட்டின் விளிம்புநிலை மக்களின் வாழ்வை படம் பிடித்துக் காட்டுகிறது படம்.
புரையோடிய சாதிய வன்மம் எப்படி வர்க்க முரண்பாட்டை உருவாக்குகிறது என்பதை இயல்பாக உணர்த்துகிறது இந்தப் படம்.
"எந்த சாதியில்தான் திருடர்கள் இல்லை" வலிமையான வசனங்கள் வாழ்வியலோடு கலந்துள்ள வன்மச் சிந்தனையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
உயிர் காக்க நீதிமன்றத்தில் போராடும் வழக்கறிஞரின் வாதத்தையும், பாம்பு கடித்து உயிருக்காகப் போராடும் மனிதரைக் காக்கும் இருளரின் வாழ்வியல் அறிவையும் சமன்படுத்தும் ஏற்றத்தாழ்வற்ற வசனங்கள் நிரம்பிக் கிடக்கிறது படத்தில்.
வாடா, போடா, வாடி, போடி, தே...ப.., போன்ற மனித உறவுகளுக்கு ஒவ்வாத வன்முறையான வார்த்தை நடைமுறைகள் அதிகார மட்டத்தில் எவ்வளவு எளிதாக வருகிறது... அதிகாரப் படிநிலையில் கீழ்நிலையில் உள்ளவர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பளிச்செனக் காட்டுகிறது படம். காவலர்களின் அராஜகம் அச்சத்தை வரவழைக்கிறது.
எல்லாவற்றையும் தாண்டி எளிய மக்களின் புகலிடமாக சட்டப்பாதுகாப்பு வலியுறுத்தப்படுகிறது. ராஜாக்கண்ணு என்பவரின் ஒரு வழக்கு இருளர் சமூக மக்களின் வாழ்க்கையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
கடைசி நிலையில் உள்ள மனிதர்களின் நம்பிக்கையாக இன்றும் இருப்பது சிகப்புத் துண்டு போட்டவர்கள் தான் என்பதை திரைப்படத்தின் காட்சிகள் சாட்சி பகர்கின்றன.
அறிவொளி இயக்கத் தன்னார்வத் தொண்டர்கள், எளியவர்கள் வாழ்வில் எவ்வளவு இயல்பாக இணைந்து இருந்தார்கள் என்பதை படம் பேசுகிறது.
தோழர் சூர்யா, லிஜோமோல், மணிகண்டன் இவர்களோடு இருளர் சமூகத்தைச் சேர்ந்த இருட்டப்பன் - சின்ராசு,
இருட்டப்பன் மனைவி- தீபா, அவரின் மூன்று வயது மகள் ஹாசினி, மொசக்குட்டி யின் மனைவி - காவேரி ஆகியோர் படத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள்.
தோழர் ஜோதிகா, தோழர் சூர்யா, இயக்குனர் த.செ.ஞானவேல் என படத்தோடு தொடர்புடைய ஒவ்வொருவரையும் பாராட்டலாம்.
பொய் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பழங்குடி மக்களின் ஆயிரக்கணக்கான வழக்குகளுக்கு ஒரு ரூபாய் கூட பணம் பெறாமல் வாதாடியவரும், தான் நீதிபதியாக இருந்த ஆறரை ஆண்டு காலத்தில் 96 ஆயிரம் வழக்குகளுக்கு நீதி வழங்கியவரும், குறிப்பாக இந்த திரைப்படம் உருவாக காரணமாக இருந்த நீதிபதி சந்துரு அவர்கள் போற்றுதலுக்குரியவர்.
மிக நீண்ட காலமாக இருளர்களின் வாழ்வுக்காக அவர்களின் கல்விக்காக தொடர்ந்து போராடிவரும் பழங்குடியினர் இருளர் பாதுகாப்பு இயக்கப் பொறுப்பாளர் பேராசிரியர் ஐயா பிரபா கல்விமணி என்றென்றும் நினைவு கூறத் தக்கவர்.
படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்... பட்டிதொட்டியெல்லாம் படம் சென்று சேர திரையரங்கில் திரையிட படத்தயாரிப்பு குழுவை கேட்டுக்கொள்கிறது மெய்ச்சுடர்.
கருத்துகள்
கருத்துரையிடுக