உரிமைகளோடு வாழ்வதே விடுதலை!

 

உரிமைகளோடு வாழ்வதே விடுதலை!

இங்கிலாந்து அரசு நம்மை ஆட்சி செய்த காலகட்டத்தை அடிமை இந்தியா என்று சொல்கிறோம்.
ஏனென்றால் இங்கிலாந்து அரசு நமக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை, நம்மை நாமே ஆட்சி செய்து கொள்வதற்கான உரிமை, நமக்கான சட்டங்களை நாமே இயற்றிக் கொள்வதற்கான உரிமைகளை நமக்கு வழங்கவில்லை.

இந்த உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்களை இங்கிலாந்து அரசு ஒடுக்கியது.
நமது வளங்களை அவர்கள் விருப்பத்திற்கு கொள்ளையடித்துச் சென்றனர்.
அவர்கள் கொள்ளையடிப்பதற்கு வசதியாக சாலைகளை விரிவுபடுத்தினார்கள்.
இந்தியா முழுவதும் போக்குவரத்தை இணைப்பதற்காக இரயிவே துறையை உருவாக்கினார்கள்.
கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக சட்டங்களை இயற்றி அந்த சட்டத்தின்படி ஆட்சி நடப்பதாகக் கூறிக்கொண்டார்கள்.
இந்தியாவிற்குள் மாகாணங்களை உருவாக்கி அந்தப் பகுதிக்குள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை அமைத்தார்கள்.
அவர்கள் தன்னிச்சையாக இயங்க இயலாத வகையில் அவர்களை கட்டுப்படுத்த ஆளுநர்களை நியமனம் செய்தனர்.

அடிமை இந்தியாவில் இங்கிலாந்து அரசாங்கம் செய்த கொடுமைகளை தற்போது மாநில அரசுகள் அனுபவித்து வருகிறதா இல்லையா?

நம் நாட்டு வளங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா?
நம் நாட்டின் இயற்கை வளங்களான காடுகள், மலைகள், கடல்வளம், வேளாண் உற்பத்தி நிலங்கள் அத்தனையும் பாதுகாப்பாகவா இருக்கிறது?
மதுரைக்கு அருகில் மேலூர் பகுதிக்கு சென்று வாருங்கள், அப்பகுதியில் உள்ள மலைவளம் தனியார் நிறுவனங்களால் எப்படி சூரையாடப்பட்டுள்ளது என்பதை உங்களால் உணர முடியும்.
சிதம்பரம், நெய்வேலி பகுதிகளுக்குச் சென்று வாருங்கள் அப்பகுதியின் விளை நிலங்கள் எப்படி பாழாய்ப் போயுள்ளது என்பதை உங்களால் உணர முடியும்.
உங்கள் ஊருக்குச் சென்று வருங்கள். நீங்கள் சிறு வயதில் கண்ட விளைநிலங்களின் நிலையை பாருங்கள்...
உங்கள் வேளாண் நிலத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் இரசாயன உரங்கள் கொட்டப்படுகிறது, உங்கள் நிலங்கள் வேளாண் பயன்பாட்டுக்கு மாறாக மீத்தேன் எடுத்தல், எண்ணெய் வளங்களை உறிஞ்சுதல், இயற்கை எரிவாயு எடுத்தல் போன்ற பயன்பாட்டுக்கும் தொழிற்சாலைப் பயன்பாட்டுக்குமாக மாறிப்போயுள்ளது.
அத்தனை வளங்களும் இன்று பாதுகாப்பற்ற நிலையில்...
பன்னாட்டு, உள்நாட்டு பெரு வணிக நிறுவனங்களின் ஆதாய வேட்டைக்காடாக நமது இயற்கை வளங்கள் மாறிப்போய் உள்ளதை உங்களால் உணர முடியும்.
இயற்கை வளங்களைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டிய ஆளும் அரசு இயற்கை வளங்களை அழித்தொழிக்கும் நோக்கத்தோடு மக்கள் கருத்துக் கேட்புக்கான சட்டத்தின் கூறுகளை நீக்கி மக்களின் உரிமைகளைப் பறித்து வருகிறதா இல்லையா?
ஒவ்வொரு மாநிலத்தின் நில வளங்களை மாநில அரசின் ஒப்புதலின்றியே இந்திய அரசு எடுத்துக் கொள்வதற்கான அத்தனை செயல்பாடுகளும் நடந்து வருகிறதா இல்லையா?
வளங்களை கொள்ளையடிப்பதற்காகவே சாலைகள் விரிவுபடுத்தப்படுகிறதா இல்லையா? கூறுங்கள்...

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக்க கட்டுப்படுத்தும் ஆளுநர்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் சட்டங்களுக்கு ஆளுநர்தான் அனுமதி அளிக்க வேண்டும்.
மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளுக்கான சட்டங்களை மாநில அரசுகள் இயற்றிக் கொள்ள இந்திய அரசியல் சட்டம் அனுமதி அளித்தாலும், அச்சட்டங்களுக்கான அனுமதியை ஆளுநர் அனுமதித்தால்தான் நடைமுறைப்படுத்த முடியும்.
மக்களாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை விட ஆளுநர் மதிப்பு மிக்கவராக உள்ளார்.
இது ஆங்கிலேயர்கள் மாகாணங்களைக் கட்டுப்படுத்தியதைப் போல் இந்திய அரசு மாநிலங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதாக இருக்கிறதால்லவா?
தமிழ்நாட்டுச் சிறைகளில் உள்ளவர்களை விடுவிக்க தமிழ்நாட்டு அரசுக்கு உரிமை உள்ளது என்றாலும் ஆளுநரின் அனுமதிக்காக இன்றளவும் சட்டமன்றம் காத்து நிற்கிறதல்லவா?
ஆளுநர் என்பவர் இந்திய அரசின் இசைவுக்காக காத்திருந்து செயலாற்றுபவராகவே இன்றளவும் இருக்கிறார் என்பதை நாம் மறுக்க முடியுமா?

கருத்துச் சொல்லும் உரிமைக்கு ஆதாரமான கல்வி உரிமையை பறிப்பதா விடுதலை?!
எல்லோரும் உயிரோடு இருப்பதற்கு உரிமை உண்டு! ஆனால் மூச்சுவிடுவதற்கான அனுமதியை நாங்கள்தான் வழங்குவோம்!
என்றால் எவ்வளவு கொடுமையானதோ அதைப்போல,
கருத்துக்களைச் சொல்லும் உரிமை அனைவருக்கும் உண்டு ஆனால் மாநிலங்களில் கல்வி வழங்கும் உரிமையை மட்டும் நாங்கள்தான் வைத்துக் கொள்வோம்.
இந்தியாவின் பன்முகத்தன்மையை அழித்துவிட்டு சனாதன சமற்கிருத பண்பாட்டைத் திணிப்போம்,
இந்திய ஒருமைப்பாடு என்று கூறி இந்திய ஒற்றுமையைச் சிதைக்கும் வகையில் மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்களில் கல்வி வழங்கும் உரிமையை இந்திய அரசே இனி நடைமுறைப் படுத்தும்.
என்பதெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு கல்வி வழங்கும் நடைமுறையைச் சிதைக்காதா?
புதிய கல்விக் கொள்கை, நீட். ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகள் மாநில அரசின் கல்விக் கொள்கையை சீரழிப்பது அல்லவா? உரிமையைப் பறிப்பதல்லவா? இதுவா வேற்றுமையில் ஒற்றுமையை உருவாக்குவது?
உயர்கல்வி வழங்கும் உரிமையை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிடமிருந்து பறித்துக் கொள்வதா மக்களாட்சி?
எடுத்துக்காட்டாக...
நீட் தேர்வு தேவையில்லை என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக சட்டம் இயற்றியும் இன்றளவும் அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை.
நீட் போன்ற தேர்வுகளை எதிர்த்து தமிழ் நாட்டில் பல்வேறு இயக்கங்கள் போராடி வருகின்றன என்றாலும் அவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாவிட்டாலும் தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்த்தாலும் இந்திய அரசு தமிழ்நாட்டில் நீட் தேர்வை அமல்படுத்தி வருகிறதா இல்லையா?

சமய வழிபாட்டு உரிமை
நாமார்க்குங் குடியல்லோம்
நமனை அஞ்சோம்
என்ற கருத்துரிமைக்கும், சமய வழிபாட்டு உரிமைக்கும் குரல் கொடுத்த சமய நெறியாளர்கள் வாழ்ந்த நாடு இன்று சைவம், வைணவம், நாத்திகம் போன்ற வெவ்வேறு நெறிகளைக் கடைபிடித்தாலும் இந்து என்ற ஒற்றை மதத்துக்குள் திணித்துவிடுகிறது இந்திய அரசு. மாற்று மதங்களைத் தழுவும் உரிமை ஏட்டளவில் இருந்தாலும் அப்படி சமய மாற்றத்திற்கு உட்படும் நபர்கள் சட்டத்திற்கு எதிராக மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும், சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் சிந்தனையை வளர்க்கும் நடைமுறையும்தான் இன்று நடைமுறையில் உள்ளது. ஆட்சியாளர்களே சமயப் பரப்புரை செய்யும் சிறுபாண்மை சமுதாய சமயப் பெரியவர்களை மிரட்டுவதும், இந்தியாவில் பிறந்திருந்தால் இந்துக்கள்தான் என்று சொல்வதும் தொடர்கிறது. இதுபோன்ற நிலை இங்கிலாந்து ஆட்சி காலத்தில் கூட இல்லை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

மொழி உரிமை
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கி மொழிசார்ந்த போராட்டங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.
குறைந்தபட்டம் மாநில மொழி உரிமையிலாவது இந்திய அரசு தலையிடாமல் இருக்கிறதா?
தமிழ் நாட்டுக்குள் இயங்கும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான இந்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் இந்தி திணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறதா, இல்லையா?
இருபத்திஇரண்டு மொழிகள் கொண்ட ஒரு தேசத்தில் இந்தி மொழியை மட்டும் அலுவல் மொழிகாக அறிவித்து விட்டு, இந்தியை திணிக்க வில்லை என்பது அப்பட்டமான பொய் இல்லையா?
இந்திய அரசின் இணையதளங்களுக்குச் சென்று பாருங்கள் இந்தியைத் தவிர வேறு இந்திய மொழிகள் அனுமதிக்கப்பட்டிருக்கிறதா?
இந்திய அரசின் திட்டங்களின் பெயர்களெல்லாம் தமிழிலும், தெலுங்கிலும், மலையாளத்திலுமா இருக்கிறது அத்தனையும் இந்தி மொழியில்தானே உள்ளது?
உங்களின் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக பத்திரத்தை எடுத்துப் பாருங்கள், நீங்கள் எடுத்துக்கொண்ட திட்டம் குறித்து உங்களது மொழியில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதா?
சில தனியார் நிறுவனங்கள் தங்களின் வியாபாரத் தளத்தை விரிவுபடுத்த இந்திய மொழிகள் அனைத்திலும் தரும் விவரங்களைக்கூட இந்திய அரசு தனது சட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துச்செல்ல முயற்சிப்பதில்லை.
மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுருத்தும் இந்திய அரசு மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையை தீவிரமாக செயல்படுத்துகிறதா?
மாநில மொழிகளில் வழங்காட உரிமை மறுக்கும் இந்திய அரசு இந்தி மொழியில் மட்டும் வழக்காடும் உரிமையை வழங்குகிறதே அது நியாயமா?
இவற்றையெல்லாம் உற்றுநோக்கும்போது இந்திய மொழிகளே இன்னும் விடுதலை பெறவில்லை என்பது விளங்கவில்லையா?
இந்திய மொழிகளே விடுதலை பெறவில்லையென்றால் இந்தியர்கள் விடுதலை பெற்று விட்டார்கள் என்பது போலியாகத்தானே இருக்கிறது?

இந்தியாவை அடிமைப்படுத்த இந்திய மொழிகளை அந்நியர்கள் அழித்தனர் என்று வரலாற்றில் படிக்கிறோம்.
இந்திய மொழிகளை அழிக்கும் அத்தனை செயல்திட்டங்களையும் இந்திய அரசும் செய்து வருவதை உங்களால் உணர முடிந்தால் விடுதலை விரைவில் கிட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா