வறியார்க்கொன்று ஈவதே ஈகை!

வறியார்க்கொன்று ஈவதே ஈகை!
---------------
பேராவூரணி பேருந்து நிலையத்தில் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய ஆதரவற்ற மக்களுக்கு தொடர்ந்து 30 நாட்களுக்கு மேலாக உணவு வழங்கி வருகிறார் பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் வன்மீகநாதன்.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்

என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

பசி எல்லா உயிர்க்கும் பொதுவானது.  அதை அறிவதே ஒத்ததறியும் உயர் பண்பாகும்

மற்றவர்களின் பசிப்பிணியை போக்குவதை மிக உயர்ந்த அறமாக திருக்குறள் போற்றுகிறது.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி.

வறியவர்களுக்கு பசிப் பிணியை நீக்கும் பெரும் பணியைச் செய்தவர்கள் உலகைப் படைத்தவனின் கருவூலத்தில் சேமிக்கிறார்கள் என்கிறார் வள்ளுவர்.

ஏழைகளுக்கு உணவளிப்பது கடவுளுக்கு கடன் கொடுப்பதற்கு சமம் என்கிறது திருவிவிலியம்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் பெருமகனார் வகுத்தளித்த அறம் பசிப்பிணி போக்குவது.

சமயங்கள் கடந்து சான்றோர்கள் போற்றும் ஒப்பற்ற பணி சாப்பிடக் கொடுப்பது.

பெரும் தனவந்தர்களும் அரசும் செய்யவேண்டிய அரும்பெரும் பணியை கங்கணம் கட்டிக் கொண்டு செய்துவருகிறார் பேராவூரணி பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடை வைத்து நடத்தும் வன்மீகநாதன்.

நாட்டாணிக்கோட்டையில் வசித்து வரும் இவர் அன்றாடம் உழைத்து அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து பிழைத்து வருபவர்.  பெரும் நிலக்கிழாரோ, பரம்பரை பணக்காரரோ கிடையாது.

ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருவதற்கு முன்பே பேராவூரணி பிள்ளையார் கோவிலில் அன்னதானம் நிறுத்தப்பட்டுவிட்டது.

ஆதரவற்றவர்கள் அங்குமிங்கும் அலைந்தனர்.  வயிற்றை இறுக்கி கட்டிப்பிடித்துக்கொண்டு சுருண்டு படுத்துக் கிடந்தனர்.  பேரூராட்சி குடிதண்ணீர் குழாய் தான் இவர்கள் பசியாறும் இடமாக மாறிப் போனது.

இந்நிலையில்தான் வன்மீகநாதன் அவர்கள் இவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க முடிவெடுத்தார்.

சுமார் 30 பேருக்கு உணவு வழங்கும் பணியை ஒருநாள் விடாமல் செய்து வருகிறார்.

அன்னதானம் என்கிற பெயரில் திருவிழா காலங்களில் உணவு தயாரித்து போவோர் வருவோர் எல்லோருக்கும் கொடுத்து பாதி தின்று பாதி தெருவில் கொட்டப்படுகிறது.  ஆனால் இதுபோன்ற நெருக்கடி காலங்களில் உணவின்றி தவிக்கும் மக்களை கேட்பாரில்லை பார்ப்பார் இல்லை.

வள்ளலார் செய்த பணியை செய்யத் துணிந்த வன்மீகநாதன் அவர்களுக்கு நாளுக்குநாள் ஆதரவுக்கரம் பெருகி வருகிறது.

இதுகுறித்து வன்மீகநாதன் கூறியதாவது, "நான் செய்யும் இப்பணியை அரசாங்கமும், பெரும் பணக்காரர்களும் செய்ய முன்வர வேண்டும், என்னால் காலை உணவு மட்டுமே கொடுக்க முடிகிறது. மதிய இரவு உணவுகளை யாராவது வழங்க வேண்டும்.  ஊரடங்கு காலத்தில் அரசு இவர்களை கவனத்தில் எடுக்கவேண்டும்" என்கிறார் .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா