புதுக்கோட்டையில் போராட்டம்

தமிழர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பறிக்காதே! புதுக்கோட்டையில் போராட்டம்!
----------------
தமிழகத்தில் தமிழர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பறிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி நீக்கப்பட்டு இருக்கிறது.

குரூப் 2 தேர்வில் நூறு வினாக்கள் தமிழிலிருந்து கேட்கப்பட்டு வந்தது.  இந்த முறையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மாற்றியிருக்கிறது. இதனால் தமிழே தெரியாமல் தமிழ்நாட்டில் பணிக்கு வரும் சூழல் உருவாகி இருக்கிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் நீக்கப்பட கூடாது!
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 90 விழுக்காடு தமிழர்களுக்கு வேலை வழங்க வேண்டும்!
என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை சார்பில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது.

500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இளம் பெண்கள் கலந்துகொண்டு;
தமிழர்களுக்கே வேலை கொடு! தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை கொடு! என்று முழக்கமிட்டனர்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைத்ததும்; மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டது. ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.  இதனால் இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அதிகமாக பாதிக்கப்படும் நிலை உருவானது.  மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முடிவை மாற்ற வலியுறுத்தி வட இந்தியாவில் பெரும் போராட்டம் நடைபெற்றது.  போராட்டங்கள் கட்டுக்கடங்காமல் போகவே மத்திய அரசு பணிந்தது.

இன்று தமிழ்நாட்டில் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படும் சூழலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உருவாக்கி வருகிறது.  இந்தச் சூழலில் புதுக்கோட்டையில் இளைஞர்கள் நடத்திய போராட்டம் ஒரு நல்ல தொடக்கம் ஆகும்.

" மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே நூறு விழுக்காடு வேலை என்ற சூழல் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் சூழலில் யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டில் வேலைக்கு வரலாம் என்ற தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடு தமிழக இளைஞர்களை வஞ்சிப்பது ஆகும். புதுக்கோட்டையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை தொடங்கிய இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் தொடர வேண்டும்"
 என்றார் பேரவையின் தலைவர் முனைவர் வைர.ந. தினகரன்.

இந்தி எதிர்ப்பு போராட்டம்!
ஜல்லிக்கட்டு போராட்டம்!
பேரழிவுக்கு எதிரான நெடுவாசல் போராட்டம்!
என போராட்ட வரலாறுகளை கொண்ட தமிழ்நாட்டில் தமிழர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பறிக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முடிவை மாற்றும் வரை இளைஞர்களின் எழுச்சி போராட்டம் தொடரட்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா