போட்டித் தேர்வுகள் - வரமா? சாபமா?
போட்டித் தேர்வுகள் - வரமா? சாபமா?
- விவரங்கள்
- எழுத்தாளர்: நா.வெங்கடேசன்
- தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
- பிரிவு: கட்டுரைகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுப்பு 4 (TNPSC Group IV என்று ஆங்கிலத்தில் சொன்னால்தான் தமிழ்நாட்டு மக்களுக்குப் புரியும்) பணிக்கான தேர்வுகளை நடத்த உள்ளது. விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. பத்தாம் வகுப்பு அளவில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு அதில் கேள்விகள் கேட்கப்படும். அதிகபட்ச மதிப்பெண் பெறுபவருக்கு பணி வழங்கப்படும்.
அன்மைகாலமாக அரசுப் பணி மீதான மோகம் அதிகரித்து வருகிறது. எப்படியாவது அரசுத்துறை வேலைக்குச் சென்றுவிட்டால் நேரக்கணக்கில் குறைவான வேலையைப் பார்த்துவிட்டு (இதில் டீக்கடை மாஸ்டர், விவசாயி, பிட்டர், கொத்தனார், சிற்பி, தச்சுப் பணி போன்ற வேலைகளோடு ஒப்பிடுகையில் வேலை குறைவு) கைநிறைய சம்பளம் பெறலாம் என்ற நோக்கத்தில் பிள்ளைகளைப் பெற்றோர்கள் விரட்டத் தொடங்கியுள்ளனர். பணியிடத்தின் அளவைவிட பல பல மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்து குவிகிறது.
பத்தாம் வகுப்பைப் அடிப்படைத் தகுதியாகக் கொண்ட அடிப்படைப் பணியாளர் பணிக்கு பொறியியல் பட்டதாரி முதல் மேலாண்மைப் பட்டதாரி வரை போட்டிபோடும் நிலை நம் நாட்டின் அவலத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.
ஆர்வம் பணியின் மீதா? பளபளக்கும் பணப்பயன் மீதா?
ஆசிரியப் பணிமீது ஆர்வம் கொண்டவர்கள், ஆசிரியர் பயிற்சிப் பட்டயம் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் முடித்தல் வேண்டும்.
மருத்துவச் சேவை செய்ய ஆசைப்பட்டால் மருத்துவத் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல் துறையில் பணியாற்றிட பொறியியல் துறைகளில் இளநிலை அல்லது பட்டயம் படித்தல் வேண்டும்.
வணிகம் செய்ய ஆசைப்படுபவர்கள் வணிகவியல் துறையில் பட்டம், பட்டயம் அல்லது பட்டையக் கணக்காயர் படிப்பினை படிக்கலாம்.
இவைகளெல்லாம் மாணவர்களின் விருப்பத்தை நிறைவேற்றிடும் வெவ்வேறு படிப்புத் துறைகள். இவைகளெல்லாம் விருப்பத்தோடு கல்வியைக் கற்று சமூகத்தில் சிறப்பாகப் பணியாற்றிட உருவாக்கப்பட்ட கல்விக் கட்டமைப்புகள்.
ஆனால் ஆட்சிப் பணியை மேற்கொள்ள விரும்பும் ஒருவர் எந்த படிப்பை படிப்பது என்ற நிலை நம் நாட்டில் இல்லை. யார்வேண்டுமானாலும் ஆட்சிப் பணிக்கான போட்டித் தேர்வெழுதி பணியாற்றலாம் என்ற நிலைதான் உள்ளது. குறிப்பிட்ட பணியின் மீது ஆர்வமோ, பயிற்சியோ தேவையில்லை.
நாட்டின் வளமான ஆட்சிப் பணியாளர்கள் பணி கூலிக்கு மாரடிக்கும் நிலையில் உள்ளது.
கனவுகளோடு நாட்டை வளப்படுத்தும் நிலையில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
அரசுப் பணியில் உள்ளவர்கள் இதர பணிகளைப் பார்ப்பதில்தான் ஆவலோடும்,விருப்பத்தோடும் உள்ளனர்.
விழுந்துவிழுந்து படித்து போட்டித் தேர்வெழுதி அரசுப்பணியில் சேர்பவர்கள் அப்பணியில் விருப்பத்தோடோ, சமூகப் பங்களிப்போடோ இருப்பதில்லை. அரசுப் பணி என்ற கெளரவத்தோடு தனியார் துறையில் ஒப்பந்தம்போட்டுக்கொண்டு பணியாற்றி வருபவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.
தனியார் துறை முதலாளிகளும் அரசு அதிகாரிகள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றுவதைப் பாதுகாப்பாக உணர்ந்து அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்திக்கொள்கிறார்கள்.
அரசுப் பணி செய்யும் ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக நாட்டின் வளத்தைப் பாதுகாப்பதற்கும்,நாட்டின் சட்டத்தைக் காப்பதற்கும் பொறுப்பேற்றவர்கள். ஆனால் இவர்கள் நாட்டின் வளங்கள் கொள்ளை போக துணையாகவும்,சட்டத்தை மீறுவதற்கு பாதுகாப்பாகவும் இருப்பதுதான் நாட்டின் சாபக்கேடாக உள்ளது.
தேர்தல் காலங்களிலோ, பேரிடர் காலங்களிலோ, பணிச் சுமை அதிகம் உள்ள காலங்களிலோ மருத்துவ விடுப்பு எடுத்துக்கொள்ளும் அரசு அதிகாரிகளைத்தான் நாம் பார்த்து வருகிறோம். அதிகபட்ச விடுப்புச் சலுகையை பயன்படுத்திக்கொள்ள ஒவ்வொரு அரசு ஊழியரும் விருப்பமாக உள்ளார்கள்.
அரசுப் பணி என்பது அறப்பணி,ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு என்ற நிலை மாறி சம்மளம் பெறுவதற்காகவும் சலுகைகளை அனுபவிப்பதற்காகவும் அரசுப் பணியில் சேர்ந்து விட வேண்டும் என்ற துடிப்பே படிக்கும் இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் ஏற்பட்டு வருகிறது.
குறைந்த பட்சம் தாம் பெற்று மகிழ்ந்து வரும் அரசுப்பணியை அடுத்த தலைமுறைக்காகவாவது பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம்கூட அரசு ஊழியர்களிடம் மேலோங்கவில்லை. அரசுத் துறை நிர்வாகம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. அரசுத்துறை நிர்வாகம் என்றாலே சிறப்பாக இருக்காது என்ற எண்ணம் பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது. நூற்றாண்டு கண்ட அரசுத் துறைகளில்கூட தனியார் துறை அனுமதிப்பு நடைபெற்று வருகிறது.
தனியார் முதலாளிகளின் கண்காணிப்பில் (அடக்குமுறைக்குள்) நடைபெறும் நேர்த்தியான(?)நிர்வாகத்தைப் பார்த்து வெகு மக்கள் தனியார் துறையை ஆதரிக்கத் தொடங்கிவிட்டார்கள். அரசுத்துறை நிர்வாகம் முற்றிலும் சீர்கெட்டு எல்லாவற்றிலும் தனியார் துறையை எதிர்பார்க்கும் நிலை வந்துவிட்டது.
பணிப்பாதுகாப்பற்ற ஒப்பந்த பணியாளர்களை நியமிப்பது, பொறுப்பற்ற ஒப்பந்த பணியாளர்கள் அரசின் சொத்தை அழிப்பது என்று அரசுத்துறை நிர்வாகம் சீர்கெட்டு வருகிறது.
காமராசர் காலத்தில் பணியாற்றிய நெ.து.சுந்தரவடிவேலு தொடங்கி தற்காலத்தில் பணியாற்றும் சகாயம் வரை அரசுப்பணியை அர்ப்பணிப்போடும் ஈடுபாட்டோடும் செய்து, மக்கள் பணியாற்றிவரும் அரசுப்பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
ஆட்சிப் பணியை சீர்தூக்கிட ஆவண செய்யாமல், தனியார் துறையின் அருமை பெருமைகளைப் பேசி, நாட்டின் வளர்ச்சி என்று கூப்பாடு போட்டு நாட்டை சீரழிக்கும் போக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
ஆட்சியாளர்களும் ஆதிக்க மனநிலை கொண்ட முதலாளி வர்கமும் சேர்ந்து கொண்டு நாட்டை தனியார் மயமாக்கும் கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறார்கள். தனியார் துறை வளர்ச்சிக்காக அரசுத்துறையை முடக்கிப்போடும் நடவடிக்கைகளில் ஆட்சியாளர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.
தனியார் துறைகளின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி என்று வசனம் பேசும் நிலை வளர்ந்து வருகிறது.
போட்டித்தேர்வு என்னும் பூதம்
அரசுத் துறைக்குள் ஏழைகள் நுழைய முடியாதபடிச் செய்திட ஆதிக்க மனநிலை கொண்ட ஆட்சியாளர்கள் செய்யும் கள்ளத்தனம்தான் போட்டித்தேர்வுகள்.
ஒவ்வொரு குறுக்குச் சந்திலும் போட்டித்தேர்வுப் பயிலகங்கள் முளைத்து மாணவர்களை மிரட்டி வருகிறது.
போட்டித்தேர்வு மூலம் தகுதி கண்டு பணிக்கமர்த்தும் போக்கு மக்களிடம் தகுதியை வளர்க்கவில்லை. தெருவுக்கு தெரு பயிற்சி மையங்களைத்தான் உற்பத்தி செய்துள்ளது. அப்பயிற்சி மையங்கள் கோடிக்கணக்கில் பண வேட்டை நடத்துகிறது.
அரசுப் பணியில் உள்ளவர்கள் தனியாக போட்டித் தேர்வு பயிற்சி மையங்களைத் தோடங்கி தொழில் செய்யும் நிலை பெருகிவிட்டது.
முன்பெல்லாம் அரசுப் பணியில் உள்ளவர்கள் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவயமாக ஆலோசனைகளையும், பயிற்சிகளையும் வழங்கி அரசுப்பணிக்கு தயார்படுத்திய நிலை முற்றிலும் அழிந்துவிட்டது.
தனக்குத் தேரிந்ததையெல்லாம் பணமாக்கிவிட வேண்டும் என்ற முனைப்புதான் அரசு அலுவலர்களிடம் தொக்கி நிற்கிறது.
அரசின் அவல நிலையை எதிர்த்து போராடிய இயக்கங்களெல்லாம், இலவயப் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களைத் தொடங்கி மக்களிடம் புகழ்பெற விழைந்துள்ளன.
மக்களின் அறியாமை! ஆட்சிப் பணியாளர்களின் அலட்சியம்! ஆணவப் போக்கில் ஆட்சியாளர்கள்! எங்கே போகிறது இந்த நாடு?
என்ன செய்யலாம் ?
சமூக ஆர்வலர்களைத் தொக்கி நிற்கும் கேள்வி இதுதான்.
ஆட்சிப் பணியை விரும்பும் நிலையை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்! நாட்டின் சொத்தான ஆட்சிப் பணியாளர் நிலையை எட்ட மாணவர்களைத் தகுதிப்படுத்த வேண்டும்!
அரசுப் பணி என்பது சம்பளத்திற்கானதல்ல! நாட்டை முன்னேற்ற கிடைத்த வாய்ப்பாக நினைக்கும் நிலையை சமூகத்தில் உருவாக்க வேண்டும்!
அரசுப் பணி என்பது ஏழை எளிய மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் சட்ட பூர்வமான பணி என்பதை மனதில் நிறுத்த வேண்டும்!
சட்டத்தின் ஆட்சியை உறுதிப் படுத்தும் உயரிய பணி அரசுப் பணி என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்!
ஆட்சிப் பணியை விருப்பப் பாடமாக தனிப் பாடமாக வைத்து அதற்கென கல்லூரிகளில் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளை தொடங்கிட வேண்டும்!
இப்பாடங்களில் விருப்பமுற்று சேர்ந்து படித்திடுபர்களையே அரசுப் பணிகளில் அமர்த்த வேண்டும்.
அரசு கல்லூரிகள், பள்ளிகளில் உள்ள பாடத்திட்டத்தை ஒழுங்குபடுத்துவது, அவ்வப்போது தரம் உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளைச் செய்ய வலியுறுத்த வேண்டும்!
தகுதிக்குரிய பாடத்தில் பட்டம், பட்டயம் பெற்றவர்களை மீண்டும் தகுதிகாண் போட்டித் தேர்வுகளுக்கு உட்படுத்தும் நிலையை அகற்ற வேண்டும்!
பட்டம், பட்டயம் போன்ற பாடங்களில் பெற்ற மதிப்பெண்ணை மையப்படுத்தி பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய வேண்டும்!
பத்தாம் வகுப்பைத் தகுதியாகக் கொண்டு கொடுக்கப்படும் பணிக்கு, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதே போதும்தானே! பிறகெதற்கு போட்டித் தேர்வு! மாணவர்களின் தகுதியை அளவிட மதிப்பெண் வழங்கப்படுகிறது. அம்மதிப்பெண்ணைக் கொண்டு பணி வழங்குவதுதானே சரியானதாக இருக்கும். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றது போதாதென்றால் அது மட்டுமே தகுதியல்ல என்றால் பத்தாம் வகுப்பின் பாட முறைையும், தேர்வு முறையையும், வகுப்பெடுக்கும் முறையையும்தானே மாற்றியமைக்க வேண்டும். எதற்காகக் போட்டித் தேர்வு?
போட்டித் தேர்வு தேவையில்லை ஏன்?
ஒவ்வொரு பணிக்கும் தேவையான தகுதிகள் பள்ளி, கல்லூரி பாடப்புத்தகங்கள் மூலமாக அனைவருக்கும் கற்பிக்கும் முறைதான் உகந்தது. அதை விடுத்து போட்டித் தேர்வு நடத்துவது, அதற்காக பாடத்திட்டங்களை வகுப்பது போன்றவை ஊழலுக்கும், தனியார் போட்டித் தேர்வு மையங்களை வளர்ப்பதற்குமே பயன்படும்.
அரசாங்கத்தின் எந்தத் துறையின் மூலமும் போட்டித் தேர்வு மையங்கள் நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை. அரசுக் கல்லூரிகளைப் போலவோ, அரசுப் பள்ளிகளைப் போலவோ, சட்டப்படியான அரசு பயிற்சி மையங்கள் நாடுமுழுவதும் தொடங்கப்பட்டு இலவயமாக பாடங்கள் நடத்தப்படுவதில்லை.
ஏழைகள், ஊர்ப்புற மக்கள் படிப்பதற்கு வாய்ப்பற்ற போட்டித் தேர்வு நிலையை உருவாக்கி அத்தேர்வுகளில் வெற்றி பெறுவதுதான் தகுதி என்று கூறுவது சமூக நீதிக்கு எதிரானது.
போட்டித்தேர்வுகள்தான் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் என்றால் அதுபோன்ற தேர்வு முறையை கல்வித்துறையின் மூலம் நடத்தி தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதுதான் முறையாக இருக்கும்.
போட்டித் தேர்வுகள், தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிப்பதற்கும், தங்கள் நிறுவன விளம்பரத்திற்காக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதற்கும் வழிவகுக்கும்.
இப்பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்களே அரசுப் பணிக்கு செல்ல அதிக வாய்ப்பிருப்பதால், எதிர்காலத்தில் அரசு நிர்வாகம் இத்தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படும் நிலையை தவிற்க முடியாது.
போட்டித் தேர்வுகளை நடத்த மாற்றுத்திட்டம்
போட்டித்தேர்வு நடத்துவதுதான் வழி என்றால் தனியார் பயிற்சி மையங்களை தடுக்க வேண்டும். அந்நிறுவனங்களின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும். அரசே போட்டித் தேர்வு பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கி நடத்த வேண்டும். அரசு அதிகாரிகளை அப்பயிற்சிக்குப் பயன்படுத்த வேண்டும். ஏழை எளிய மக்கள், அரசுப் பணி வாய்ப்பைப் பெற்று மக்கள் பணியாற்றிட வழிவகை செய்ய வேண்டும். கார்ப்பரேட் கல்விமயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இந்நிலையை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
- மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பேராவூரணி
கருத்துகள்
கருத்துரையிடுக