பேராவூரணி, இந்திராநகர் - இயற்கையாய் ஒரு சமத்துவபுரம்
பேராவூரணி, இந்திராநகர் - இயற்கையாய் ஒரு சமத்துவபுரம்
பேராவூரணி வட்டம், மாவடுகுறிச்சி ஊராட்சியில் உள்ளது இந்திரா நகர் என்னும் ஊர். சுமார் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் முற்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, தாழ்த்தப்பட்ட வகுப்பு என இருபதுக்கும் மேற்பட்ட சாதிகள், சுமார் ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட இந்த ஊர் சமூக மாற்றத்திற்கான முன்னுதாரணம். பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்திரா நகர் என்னும் இந்த ஊர். பொதுவாக ஊரகப்பகுதி என்றாலே இயற்கை எழில் சூழ்ந்திருக்கும் என்பதில் மாற்றமில்லை. ஆனால் சாதிய வன்மம் நிறைந்த ஊரகப் பகுதிகளைத்தான் செய்தி ஊடகங்கள் நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றன. இதே தஞ்சை மாவட்டத்தில்தான் திருநாள்கொண்டசேரி என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட முதியவரின் பிணத்தை பொது வழியில் எடுத்துச்செல்லக்கூடாது என்று ஆதிக்க சாதிகளால் தடுத்த நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்தது. இதற்கு மாறாக இதே தஞ்சை மாவட்டத்தில் சமூக நீதியைக் கடைபிடிக்கக் கூடிய ஊராகத் திகழ்கிறது இந்திராநகர். ஒரு ஊரில் அனைத்து சாதியினரும் வாழ்கிறார்கள் என்பது ஒரு செய்தியல்ல. அது மட்டுமே இந்திரா நகரைக் குறித்த செய்தியுமல்ல. இக்கிராமத்தில் சாதிக்கான தெரு கிடையாது. அனைத்து சாதிமக்களும் மாறி மாறி கலந்து அனைவரும் சேர்ந்தே வசிக்கிறார்கள். இங்கு அனைத்து சாதியினரும் பயன்படுத்தும் வகையில் ஒரே ஒரு சுடு காடு மட்டுமே உள்ளது. அங்கு ஒரே ஒரு சுடுகாட்டுக் கொட்டகை மட்டுமே இருக்கிறது. எச்சாதியைச் சார்ந்தவரும் இச்சுடுகாட்டுக் கொட்டகையைத்தான் பயன்படுத்த வேண்டும். ஊரில் துக்கம் விழுந்துவிட்டால் வீட்டுக்கு ஒருவர் வந்து துக்க வீட்டில் அமர்ந்து விடுகிறார்கள். பந்தல் போடுவதிலிருந்து, டியூப் லைட் கட்டுவது, சுடுகாட்டு வேலைகளைச் செய்வது என அனைத்து வேலைகளையும் ஆளுக்கொன்றாக செய்து முடிக்கிறார்கள். இதுவும் எல்லா ஊர்களிலும் நடப்பதுதான் என்றாலும் இறப்பு வீட்டுக்கு உறவினர்களும், சாதியின் அடிப்படையில் அமைந்த வேலைகளைச் செய்பவர்களும் மட்டுமே ஈமச் சடங்கு வேலைகளில் ஈடுபடுவார்கள். ஆனால் இவ்வூரில் அனைத்து சாதியினரும் அனைவருக்காகவும் சேர்ந்து வேலை செய்கிறார்கள். அது மட்டுமல்ல. இறந்தவர் வீட்டு ஈமச் சடங்கிற்குத் தேவையான அனைத்துச் செலவுகளையும் ஊர் மக்களே சேர்ந்து செய்துவிடுகிறார்கள். ஒருவர் ஒரு நோட்டை எடுத்துக்கொண்டு வருவார். ஊர்க்காரர்கள் அவரவர் விருப்பம்போல் 5,10,50, 100 என்று பணமாக கொடுத்து அவரவர் பெயரை எழுதிவிட்டுச் செல்வார்கள். மொத்தமாக சேர்ந்த தொகையிலிருந்து அன்றைய நாள் செலவு போக மீதமிருக்கும் பணத்தை இறந்தவர் குடும்பத்தில் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறார்கள். இப்பழக்கம் கூட உறவுகளிடம் மட்டுமே பெரும்பாலும் நடைமுறையில் இருக்கக்கூடியதாகும். அதுவும் சடங்கிற்காகவும், வந்த உறவினர்களின் வருகைப்பதிவுக்காகவும் மட்டுமே இந்த பண வசூல் நடக்கும். ஆனால் இறந்தவர் வீட்டு ஈமச்சடங்குக்காக ஒட்டுமொத்த ஊர் மக்களே பொறுப்பேற்றுக்கொள்ளும் நடைமுறை இங்கு உள்ளது. துக்க நிகழ்வு மட்டுமல்ல, ஊர் பொது விழாவான பொங்கல் விழாவைக்கூட இவ்வூர் மக்கள் ஒன்று சேர்ந்துதான் கொண்டாடுகிறார்கள். சாதிக்கொரு பொங்கல் கெடை என்பது ஊரகப்பகுதிகளில் நாம் அறிந்த செய்தி. ஆனால் இதற்கு மாறாக பொதுத்திடலில் ஒட்டு மொத்த ஊரே சாதி வேறுபாடு இல்லாமல் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்கிறது. ஆண்ட சாதிப் பெருமை பேசித் திரியும் இக்காலகட்டத்தில், பெரியாரியம் பூத்த இப்பகுதி இயற்கையால் விளைந்த சமத்துவபுரம்.
நா.வெங்கடேசன்
ஆசிரியர்-மெய்ச்சுடர் இதழ்.
கருத்துகள்
கருத்துரையிடுக