சீரழியும் பள்ளிகள்! சிறக்குமா எதிர்காலம்!




"சிங்கிட மணி சிங்கிட மணி", "ஏக் தோ தீன் சார் சொல்லித் தாரேன்", "சித்தாடை கட்டிக்கிட்டு", "தங்கமான ஊதாரி" இந்தப்பாடல்கள்களுக்கு திரைக்கலைஞர்கள்(?) போலவே அச்சு அசலாக நடனமாடும் மேடைகளை தற்போது தொடர்ந்து பார்க்க முடிகிறது. தெருக்கூத்து மேடையோ, கோவில் விழாக்களின் நள்ளிரவு நடன மேடையோ அல்ல. அத்தனையும் பள்ளி மேடைகள். பள்ளிச் சிறுவர்களை ஆபாச வரிகள் அடங்கியப் பாடல்களுக்கு நடனமாடவிட்டு வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கிறது நமது ஆசிரியச் சமூகம். 

ஒருபக்கம் அரசுப்பள்ளிகளெல்லாம் மூடக்கூடிய அளவுக்கு மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள். இதனால் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அரசுத் துறையை இழுத்து மூட அரசும், ஆட்சியாளர்களும் கங்கனம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். தமிழ் வழிக் கல்வி தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை விரைவில் வந்துவிடும் போலிருக்கிறது. இப்போதே பல அரசு தொடக்கப்பள்ளிகளில் தமிழ்வழி வகுப்புகளுக்கு மாணவர்கள் இல்லாத நிலை வந்துவிட்டது. தமிழ் மாணவர்கள் ஆங்கிலமும் தெரியாமல், தமிழும் தெரியாமல் வாழும் சவலைப் பிள்ளை நிலைக்கு வந்துவிட்டார்கள். 

இந்த நிலையில் ஆண்டுவிழா நடத்தி அரசுப்பள்ளிகளுக்கு மாணவர்களை ஈர்க்க முற்படும் அரசுப்பள்ளிகள், மாணவர்களை ஆபாச வரிப் பாடல்களுக்கு குத்தாட்டம் போடவைத்து அவர்களின் எதிர்காலத்தை குப்பையாக்கி வருகிறது. தமிழ் நாட்டில், தமிழ் நாடு அரசால் நடத்தப்படும் அரசுப்பள்ளிகளில் கலைநிகழ்ச்சிகள் "வெல்கம் டான்ஸ்" ஆங்கிலப் பாட்டுடன் தொடங்குகிறது. ஆசிரியர்களுக்கு கலைத் திறமை இல்லையென்பதால் திரைப்பாடல்களுக்கு நடனமாடப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் மாணவர்கள். இதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி இருந்தாலும் கூட சிறந்த திரையிசைப் பாடல்களையாவது தேர்வு செய்யக்கூடாதா? மாணவர்களின் கலைத் திறன் அவர்களின் எதிர்காலத்துக்கு ஊற்று. அவர்கள் மேடைகளில் எப்படி காட்சி தருகிறார்களோ அதுபோலவே தனது வாழ்வில் வாழ முற்படுவார்கள். அதற்காகத்தான் தேசப் பற்றை கலை வடிவில் மாணவர்களிடம் கொண்டு சென்றார்கள் நம் முன்னோர்கள். "அச்சம் என்பது மடமையடா", "ஒவ்வொரு பூக்களுமே", "உன்னால் முடியும் தம்பி தம்பி", "உடமை இழந்தோம் உயிர்கள் இழந்தோம் உரிமை இழக்கலாமா" போன்ற தன்னம்பிக்கையை வளர்க்கக் கூடிய பாடல்கள் மாணவர்களை எதிர்காலத்தில் தன்னம்பிக்கை உள்ள சமூகமாக மாற்றும். 

பேராவூரணி ஒன்றியத்தில் பணி செய்யத பல தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பன்முகத் திறமையோடு இருந்தார்கள். மாணவர்களையும் அப்படியே வளர்த்தார்கள். உதாரணத்திற்கு ஆசிரியர்கள் குசேலராகவன், நீல செயவாணன், சண்முகவடிவு போன்றவர்கள் மாணவர்களிடம் பன்முகத் திறமையை வளர்த்தார்கள். ஆனால் அதுபோன்ற ஆசிரியர்கள் கூட்டம் இன்று முற்றிலும் இல்லை என்று சொல்ல முடியாதென்றாலும் எண்ணிக்கையளவில் குறைந்துவிட்டார்களோ என்ற எண்ணத்தை பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் நமக்குப் படம் போட்டுக் காட்டுகின்றது.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா